கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம் 6:1-18

  • கடவுளின் அளவற்ற கருணையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது (1, 2)

  • பவுல் தன் ஊழியத்தைப் பற்றிச் சொல்கிறார் (3-13)

  • விசுவாசிகளாக இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள் (14-18)

6  கடவுளிடமிருந்து அளவற்ற கருணையைப் பெற்றுக்கொண்ட பின்பு அதனுடைய நோக்கத்தை நிறைவேற்றாமல் இருந்துவிடாதீர்கள்+ என்று அவருடைய சக வேலையாட்களான நாங்கள் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்.+  ஏனென்றால், “அனுக்கிரகக் காலத்தில் உன்னுடைய வேண்டுதலைக் கேட்டேன், மீட்பின் நாளில் உனக்கு உதவி செய்தேன்”+ என்று கடவுள் சொல்கிறார். இதோ! இப்போதே அனுக்கிரகக் காலம். இதோ! இப்போதே மீட்பின் நாள்.  எங்களுடைய ஊழியத்தில் யாரும் குறை கண்டுபிடிக்கக் கூடாது+ என்பதற்காக நாங்கள் யாருக்கும் எந்தவித இடைஞ்சலும்* உண்டாக்காமல் இருக்கிறோம்.  எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+  அடிகள், சிறைவாசங்கள்,+ கலகங்கள், பாடுகள், தூக்கமில்லாத இரவுகள், பட்டினிகள்+ ஆகியவற்றின்போது நாங்கள் காட்டிய சகிப்புத்தன்மையின் மூலமும்,  தூய்மை, அறிவு, பொறுமை,+ கருணை,+ கடவுளுடைய சக்தி, வெளிவேஷமில்லாத அன்பு,+  உண்மையான பேச்சு, கடவுளுடைய வல்லமை+ ஆகியவற்றின் மூலமும், வலது கையிலும்* இடது கையிலும்* பிடித்திருக்கிற நீதியின் ஆயுதங்கள்+ மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம்.  அதோடு, மற்றவர்கள் எங்களைப் புகழ்ந்து பேசினாலும் கேவலமாகப் பேசினாலும், தாழ்வாகப் பேசினாலும் உயர்வாகப் பேசினாலும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். அதுமட்டுமல்ல, நாங்கள் ஏமாற்றுக்காரர்களாகத் தோன்றினாலும் உண்மையுள்ளவர்களாகவும்,  அறியப்படாதவர்களாகத் தோன்றினாலும் நன்கு அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்களாக* தோன்றினாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும்,+ தண்டிக்கப்பட்டவர்களாக* தோன்றினாலும் கொல்லப்படாதவர்களாகவும்,+ 10  துக்கப்படுகிறவர்களாகத் தோன்றினாலும் எப்போதுமே சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகளாகத் தோன்றினாலும் நிறைய பேரை பணக்காரர்களாக ஆக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களாகத் தோன்றினாலும் எல்லாவற்றையும் பெற்றவர்களாகவும்+ இருப்பதன் மூலமும் கடவுளுடைய ஊழியர்களாக எங்களைச் சிபாரிசு செய்கிறோம். 11  கொரிந்தியர்களே, நாங்கள் உங்களிடம் ஒளிவுமறைவில்லாமல் பேசியிருக்கிறோம், உங்களுக்காக எங்கள் இதயக் கதவை அகலமாகத் திறந்திருக்கிறோம். 12  எங்களுடைய இதயத்தில் உங்களுக்கு இடம் கொடுத்திருக்கிறோம்,+ ஆனால் உங்களுடைய இதயத்தில் எங்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறீர்கள், எங்கள்மேல் கனிவான பாசத்தைக் காட்டாமல் இருக்கிறீர்கள். 13  அதனால், என்னுடைய பிள்ளைகளுக்குச் சொல்வதுபோல் சொல்கிறேன், எங்களுக்காக நீங்களும் உங்கள் இதயக் கதவை அகலமாகத் திறங்கள்.+ 14  விசுவாசிகளாக* இல்லாதவர்களோடு பிணைக்கப்படாதீர்கள்.*+ நீதிக்கும் அநீதிக்கும் என்ன உறவு இருக்கிறது?+ ஒளிக்கும் இருளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?+ 15  கிறிஸ்துவுக்கும் பொல்லாதவனுக்கும்* என்ன இசைவு இருக்கிறது?+ விசுவாசியாக இருப்பவனுக்கும் விசுவாசியாக இல்லாதவனுக்கும் என்ன பொருத்தம் இருக்கிறது?+ 16  கடவுளுடைய ஆலயத்துக்கும் சிலைகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?+ நாம் உயிருள்ள கடவுளின் ஆலயமாக இருக்கிறோமே;+ இதைப் பற்றித்தான் கடவுள், “நான் அவர்கள் நடுவில் தங்கியிருந்து,+ அவர்கள் நடுவில் நடப்பேன். நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்”+ என்று சொன்னார். 17  “‘அதனால், நீங்கள் அவர்களைவிட்டு வெளியே வாருங்கள், அவர்களிடமிருந்து பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதீர்கள்’;+ ‘அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்’+ என்று யெகோவா* சொல்கிறார்.” 18  “‘அதோடு, நான் உங்களுக்குத் தகப்பனாக இருப்பேன்,+ நீங்கள் எனக்கு மகன்களாகவும் மகள்களாகவும் இருப்பீர்கள்’+ என்று சர்வவல்லமையுள்ளவரான யெகோவா* சொல்கிறார்.”

அடிக்குறிப்புகள்

வே.வா., “தடுமாற்றமும்.”
ஒருவேளை, தாக்குவதற்காக இருக்கலாம்.
ஒருவேளை, தற்காப்புக்காக இருக்கலாம்.
வே.வா., “சாக வேண்டியவர்களாக.”
வே.வா., “கண்டிக்கப்பட்டவர்களாக.”
வே.வா., “இயேசுவின் சீஷர்களாக.”
நே.மொ., “பொருத்தமற்ற நுகத்தடியில் பிணைக்கப்படாதீர்கள்.”
நே.மொ., “பேலியாளுக்கும்.” எபிரெயுவில் இதன் அர்த்தம், “ஒன்றுக்கும் உதவாதவன்.” இது சாத்தானைக் குறிக்கிறது.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.