2 சாமுவேல் 18:1-33

  • அப்சலோமின் தோல்வியும் மரணமும் (1-18)

  • அப்சலோம் இறந்த விஷயம் தாவீதுக்குத் தெரிவிக்கப்படுகிறது (19-33)

18  பின்பு தாவீது தன்னுடன் இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்களில் நூறு நூறு பேருக்கும் ஆயிரம் ஆயிரம் பேருக்கும் தலைவர்களை ஏற்படுத்தினார்.+  தாவீது தன்னுடைய வீரர்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து, ஒரு பிரிவை யோவாப்+ தலைமையிலும்,* மற்றொரு பிரிவை செருயாவின்+ மகனும் யோவாபின் சகோதரனுமான அபிசாய்+ தலைமையிலும், இன்னொரு பிரிவை காத் நகரத்தைச் சேர்ந்த ஈத்தாய்+ தலைமையிலும் அனுப்பினார். அப்போது ராஜா, “நானும் உங்களோடு வருகிறேன்” என்று அவர்களிடம் சொன்னார்.  அவர்களோ, “நீங்கள் எங்களோடு வர வேண்டாம்.+ நாங்கள் தப்பித்து ஓடினால், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எங்களில் பாதிப் பேர் செத்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர் எங்களில் 10,000 பேருக்குச் சமம்.+ அதனால், நீங்கள் நகரத்திலிருந்தே எங்களுக்கு உதவி செய்தால் போதும்” என்று சொன்னார்கள்.  அதற்கு ராஜா, “உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதையே செய்கிறேன்” என்று சொன்னார். பின்பு, ராஜா நகரவாசலுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டார். வீரர்கள் எல்லாரும் நூறு நூறாகவும் ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டுப் போனார்கள்.  ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.  தாவீதின் வீரர்கள் இஸ்ரவேல் படையுடன் போர் செய்யப் போனார்கள். எப்பிராயீமிலுள்ள காட்டில் போர் நடந்தது.+  தாவீதின் வீரர்கள்+ இஸ்ரவேல் படையைத்+ தோற்கடித்தார்கள். அன்று ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டார்கள். மொத்தம் 20,000 வீரர்கள் கொல்லப்பட்டார்கள்.  அந்தப் பகுதி முழுவதும் போர் நடந்தது. அந்தப் போரில் வாளுக்குப் பலியானவர்களைவிட காட்டிலிருந்த ஆபத்துகளில் சிக்கி பலியானவர்கள்தான் அதிகம்.  கடைசியில், தாவீதின் வீரர்கள் தன் எதிரே வருவதை அப்சலோம் பார்த்தான். அவன் ஒரு கோவேறு கழுதைமேல் போய்க்கொண்டிருந்தான். அடர்ந்த கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரத்துக்குக் கீழே அந்தக் கழுதை போனபோது அவனுடைய தலை மரக் கிளையில் மாட்டிக்கொண்டது. அவன் ஏறி வந்த கழுதை முன்னால் போய்விட்டதால், அவன் அப்படியே அந்தரத்தில்* தொங்கினான். 10  அப்சலோமைப் பார்த்ததும் ஒரு வீரன் யோவாபிடம்+ போய், “அதோ! அப்சலோம் ஒரு பெரிய மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறான்!” என்று சொன்னான். 11  அதற்கு யோவாப், “நீ அவனைப் பார்த்தும் ஏன் அங்கேயே வெட்டிப்போடவில்லை? அப்படிச் செய்திருந்தால், நான் சந்தோஷமாக உனக்கு 10 வெள்ளிக் காசுகளும் இடுப்புவாரும் பரிசாகக் கொடுத்திருப்பேனே” என்று அவனிடம் சொன்னார். 12  அதற்கு அவன், “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக் காசுகள் கொடுத்தாலும்* ராஜாவின் மகன்மேல் கை வைக்க மாட்டேன். ‘என் மகன் அப்சலோமை யாரும் எதுவும் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று உங்களுக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் ராஜா கட்டளையிட்டதை நாங்களும் கேட்டோம்.+ 13  அதை மீறி நான் அப்சலோமைக் கொன்றுபோட்டிருந்தால் அது எப்படியும் ராஜா காதுக்குப் போயிருக்கும். அப்போது, நீங்கள்கூட என்னைக் காப்பாற்றியிருக்க மாட்டீர்கள்” என்று சொன்னான். 14  அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார். 15  யோவாபின் ஆயுதங்களைச் சுமந்த 10 வீரர்களும் அப்சலோமைச் சூழ்ந்துகொண்டு அவன் சாகும்வரை அவனைத் தாக்கிக்கொண்டே இருந்தார்கள்.+ 16  அப்போது யோவாப் ஊதுகொம்பை எடுத்து ஊதினார். இஸ்ரவேலர்களைத் துரத்துவதை விட்டுவிட்டு, உடனே அவருடைய வீரர்கள் திரும்பி வந்தார்கள். போரை நிறுத்தச் சொல்லி யோவாப் அவர்களுக்குக் கட்டளையிட்டார். 17  அவர்கள் அப்சலோமின் உடலை எடுத்து காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் வீசி, அதன்மீது கற்களை மிகப் பெரிய குவியலாகக் குவித்து வைத்தார்கள்.+ இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளுக்குத் தப்பித்து ஓடினார்கள். 18  அப்சலோம் உயிரோடு இருந்தபோது, “என் பேர் சொல்ல எனக்கு ஒரு மகன் இல்லை”+ என்று சொல்லி ராஜா-பள்ளத்தாக்கில்+ ஒரு தூணை நிறுத்தி வைத்திருந்தான். அந்தத் தூணுக்குத் தன்னுடைய பெயரையே வைத்திருந்தான். அது அப்சலோமின் நினைவுத் தூண் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது. 19  சாதோக்கின் மகனான அகிமாஸ்+ யோவாபிடம் வந்து, “நான் ஓடிப் போய் ராஜாவிடம் விஷயத்தைச் சொல்லட்டுமா? எதிரிகளிடமிருந்து ராஜாவைக் காப்பாற்றி யெகோவா நியாயம் வழங்கியிருக்கிறார்”+ என்று சொன்னான். 20  அதற்கு யோவாப், “செய்தி சொல்ல இன்றைக்கு நீ போக வேண்டாம். இன்னொரு சமயம் போகலாம். ராஜாவின் மகனே செத்துப்போயிருப்பதால் இன்றைக்கு நீ போய் செய்தி சொல்ல வேண்டாம்”+ என்றார். 21  பின்பு யோவாப் ஒரு கூஷியனைக்+ கூப்பிட்டு, “போ, நீ பார்த்ததை ராஜாவிடம் போய்ச் சொல்” என்றார். உடனே அந்த கூஷியன் அவர் முன்னால் தலைவணங்கிவிட்டு ஓட ஆரம்பித்தான். 22  சாதோக்கின் மகன் அகிமாஸ் மறுபடியும் யோவாபைப் பார்த்து, “நானும் அந்த கூஷியன் பின்னால் ஓடட்டுமா?” என்று கேட்டான். ஆனால் யோவாப், “என் மகனே, அவன்தான் போயிருக்கிறானே, அப்புறம் நீ போய் என்ன செய்தி சொல்லப்போகிறாய்?” என்று கேட்டார். 23  அதற்கு அவன், “பரவாயில்லை, நானும் போகிறேனே” என்று சொன்னான். அதற்கு யோவாப், “சரி, போ!” என்று சொன்னார். யோர்தான் பிரதேசத்தின் வழியாகப் போகும் பாதையில் அகிமாஸ் ஓடியதால், அந்த கூஷியனை முந்திவிட்டான். 24  நகரவாசல்கள் இரண்டுக்கும் நடுவே தாவீது உட்கார்ந்துகொண்டிருந்தார்.+ காவல்காரன்+ மதிலை ஒட்டியிருந்த நுழைவாசலின் கூரைக்குப் போய் ஏறெடுத்துப் பார்த்தபோது, ஓர் ஆள் தனியாக ஓடிவருவது தெரிந்தது. 25  உடனே அந்தக் காவல்காரன் ராஜாவைக் கூப்பிட்டு அதை அறிவித்தான். அதற்கு ராஜா, “அவன் தனியாக வந்தால், கண்டிப்பாக ஏதாவது செய்தி இருக்கும்” என்று சொன்னார். அவன் நெருங்கிக்கொண்டிருந்தபோது, 26  அவனுக்குப் பின்னால் இன்னொரு ஆள் ஓடிவருவதையும் காவல்காரன் பார்த்தான். உடனே அவன் வாயிற்காவலனிடம் “இதோ, இன்னொரு ஆள் தனியாக ஓடிவருகிறான்!” என்று சத்தமாகச் சொன்னான். அதற்கு ராஜா, “இவனும் ஏதோ செய்தியோடுதான் வருகிறான்” என்று சொன்னார். 27  அப்போது காவல்காரன், “முதலில் ஓடிவருகிற ஆளைப் பார்த்தால் சாதோக்கின் மகன் அகிமாஸ்+ மாதிரி தெரிகிறது” என்று சொன்னான். அதற்கு ராஜா, “அவன் நல்ல மனிதன். நல்ல செய்தியோடுதான் வருவான்” என்று சொன்னார். 28  அகிமாஸ் ராஜாவைப் பார்த்து, “ராஜாவே, நல்ல செய்தி!” என்று சத்தமாகச் சொல்லிவிட்டு, மண்டிபோட்டு தரைவரை குனிந்து வணங்கினான். பின்பு, “ராஜாவே, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்குப் புகழ் சேரட்டும். என் எஜமானாகிய உங்களுக்கு எதிராகக் கலகம் செய்தவர்களை* அவர் உங்கள் கையில் கொடுத்துவிட்டார்”+ என்று சொன்னான். 29  ஆனால் ராஜா அவனிடம், “என் மகன் அப்சலோமுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கேட்டார். அதற்கு அகிமாஸ், “அடியேனையும் ராஜாவின் ஊழியனையும் யோவாப் அனுப்பியபோது அங்கே ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால், என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது”+ என்று சொன்னான். 30  அப்போது ராஜா, “சரி, அந்தப் பக்கம் போய் நில்” என்று சொன்னார். உடனே அவன் சற்றுத் தள்ளி நின்றான். 31  பின்பு அந்த கூஷியன் வந்து,+ “ராஜாவே, என் எஜமானே, உங்களுக்கு எதிராகத் திரண்ட கலகக்காரர்கள் எல்லாரிடமிருந்தும் யெகோவா உங்களைக் காப்பாற்றி நியாயம் வழங்கியிருக்கிறார்”+ என்று சொன்னான். 32  ஆனால் ராஜா அந்த கூஷியனிடம், “என் மகன் அப்சலோமுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” என்று கேட்டார். அதற்கு அவன், “ராஜாவே, உங்களுடைய எல்லா எதிரிகளும் உங்களை அழிக்கத் திரண்ட எல்லா கலகக்காரர்களும் அவனைப் போலவே அழிந்துபோகட்டும்”+ என்று சொன்னான். 33  அதைக் கேட்டு ராஜா மனம் கலங்கினார். நுழைவாசலின் மேலிருந்த அறைக்கு ஏறிப் போய்க் கதறினார். அப்படி ஏறிப் போகும்போது, “என் மகனே, அப்சலோமே, அப்சலோமே, என் மகனே! உனக்குப் பதிலாக நான் செத்துப்போயிருந்தால் நன்றாக இருந்திருக்குமே, அப்சலோமே, என் மகனே, என் மகனே!” என்று கதறினார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “கையிலும்.”
நே.மொ., “வானத்துக்கும் பூமிக்கும் நடுவே.”
நே.மொ., “என் கையில் 1,000 வெள்ளிக் காசுகளை நிறுத்துக் கொடுத்தாலும்.”
அல்லது, “ஈட்டிகளை.”
நே.மொ., “கை ஓங்கியவர்களை.”