2 சாமுவேல் 20:1-26

  • சேபா கலகம் செய்கிறான்; அமாசாவை யோவாப் கொல்கிறார் (1-13)

  • சேபாவைத் துரத்துகிறார்கள், அவன் தலை வெட்டப்படுகிறது (14-22)

  • தாவீதின் நிர்வாகம் (23-26)

20  பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பிக்கிரியின் மகன் சேபா+ அங்கே இருந்தான். அவன் ஒரு கலகக்காரன். அவன் ஊதுகொம்பை ஊதி,+ “தாவீதுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஈசாயின் மகன்மீது எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ இஸ்ரவேல் ஆண்களே, நீங்கள் எல்லாரும் அவரவர் தெய்வங்களைப் பின்பற்றுங்கள்”*+ என்று சொன்னான்.  உடனே இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் தாவீதை விட்டுவிட்டு பிக்கிரியின் மகன் சேபாவின் பின்னால் போனார்கள்.+ ஆனால், யூதா ஆண்கள் ராஜாவைவிட்டு விலகாமல் யோர்தானிலிருந்து எருசலேம்வரை அவர் கூடவே போனார்கள்.+  தாவீது எருசலேமிலுள்ள தன்னுடைய அரண்மனைக்கு வந்துசேர்ந்தார்.+ அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுவிட்டுப்போன 10 மறுமனைவிகளையும்+ வேறொரு வீட்டில் காவலில் வைத்தார். வேளாவேளைக்கு அவர்களுக்கு உணவு கொடுத்துவந்தார். ஆனால், அவர்களோடு உறவுகொள்ளவில்லை.+ அவர்கள் சாகும்வரை வீட்டுக் காவலில்தான் இருந்தார்கள்; கணவர் உயிரோடு இருந்தபோதே விதவைகள் போல் வாழ்ந்துவந்தார்கள்.  பின்பு தாவீது ராஜா அமாசாவைப்+ பார்த்து, “மூன்று நாட்களுக்குள் யூதாவைச் சேர்ந்த ஆண்கள் எல்லாரையும் வரச் சொல்லி செய்தி அனுப்பு. நீயும் வந்துவிடு” என்று சொன்னார்.  யூதா கோத்திரத்தார் எல்லாரையும் கூப்பிட அமாசா புறப்பட்டுப் போனார்; ஆனால், தாவீது சொல்லியிருந்த சமயத்துக்குள் அவர் வந்துசேரவில்லை.  அதனால் தாவீது அபிசாயைப்+ பார்த்து, “அப்சலோமைவிட பிக்கிரியின் மகன் சேபா+ ரொம்ப ஆபத்தானவன்.+ அதனால், என்னுடைய* ஊழியர்களைக் கூட்டிக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு போ. இல்லாவிட்டால், அவன் ஏதாவது மதில் சூழ்ந்த நகரத்துக்குள் போய் ஒளிந்துகொண்டு நம்மிடமிருந்து தப்பித்துவிடுவான்” என்று சொன்னார்.  அதன்படியே, யோவாபின் ஆட்களும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ மாவீரர்கள் எல்லாரும் அவர்* பின்னால் போனார்கள். பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிப்பதற்காக எருசலேமிலிருந்து புறப்பட்டுப் போனார்கள்.  கிபியோனில்+ உள்ள பெரிய கல் பக்கத்தில் அவர்கள் வந்தபோது அவர்களைச் சந்திக்க அமாசா+ வந்தார். அப்போது, யோவாப் போர் உடையை அணிந்திருந்தார். உறையில் இருந்த வாளை இடுப்பில் செருகி வைத்திருந்தார். அவர் நடந்து வந்தபோது, அவருடைய வாள் கீழே விழுந்தது.  யோவாப் அமாசாவைப் பார்த்து, “என் சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார். பின்பு, முத்தம் கொடுக்க வருவதுபோல் காட்டிக்கொண்டு தன்னுடைய வலது கையால் அமாசாவின் தாடியைப் பிடித்தார். 10  யோவாபின் கையில் இருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. யோவாப் தன்னுடைய வாளால் அவருடைய அடிவயிற்றில் குத்தினார்,+ அவருடைய குடல்கள் வெளியே வந்து விழுந்தன. அவரைக் கொல்வதற்கு ஒரு குத்தே போதுமானதாக இருந்தது, இன்னொரு தடவை குத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. பின்பு, யோவாபும் அவருடைய சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் மகன் சேபாவைப் பிடிக்கப் போனார்கள். 11  யோவாபுடன் இருந்த வாலிபர்களில் ஒருவன் அமாசாவுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கிறவர்கள் எல்லாரும் யோவாபின் பின்னால் போங்கள்!” என்று சொன்னான். 12  அதுவரை, சாலையின் நடுவே அமாசா இரத்த வெள்ளத்தில் புரண்டுகொண்டிருந்தார். அங்கே வருகிற ஆட்கள் எல்லாரும் நின்றுவிடுவதைப் பார்த்த அந்த வாலிபன் அமாசாவை இழுத்து பக்கத்திலிருந்த வயலில் போட்டான். அப்படியும் அங்கே வருகிற எல்லாரும் நின்றுவிட்டதால் அவர்மீது ஒரு துணியைப் போட்டு மூடினான். 13  அவன் அமாசாவை சாலையிலிருந்து இழுத்துப் போட்ட பிறகு, பிக்கிரியின் மகன் சேபாவைப்+ பிடிப்பதற்காக எல்லா ஆட்களும் யோவாபின் பின்னால் போனார்கள். 14  சேபா இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்கள் வழியாகவும் பயணம் செய்து, பெத்-மாக்காவின்+ ஆபேல் என்ற நகரத்துக்குப் போனான். பிக்கிரியர்களும் அவனோடு சேர்ந்துகொண்டு அந்த நகரத்துக்குள் போனார்கள். 15  யோவாபும் அவருடைய ஆட்களும் பெத்-மாக்காவின் ஆபேலுக்கு வந்து அதை முற்றுகையிட்டார்கள். மதில் சூழ்ந்த அந்த நகரத்தைப் பிடிப்பதற்காகச் சுற்றிலும் மண்மேடு அமைத்தார்கள். பின்பு, மதிலைத் தகர்ப்பதற்காக யோவாபின் ஆட்கள் எல்லாரும் அதன் அடியில் தோண்ட ஆரம்பித்தார்கள். 16  அப்போது புத்திசாலியான ஒரு பெண் அந்த மதில் மேலிருந்து சத்தமாகக் கூப்பிட்டு, “வீரர்களே, கேளுங்கள்! தயவுசெய்து யோவாபை இங்கே வரச் சொல்லுங்கள். நான் அவரிடம் பேச வேண்டும்” என்று சொன்னாள். 17  அதனால், யோவாப் பக்கத்தில் போனார். அப்போது அவள், “நீங்கள்தான் யோவாபா?” என்று கேட்டாள். அதற்கு அவர், “ஆமாம்” என்று சொன்னார். அப்போது அவள், “இந்த அடிமைப் பெண் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்” என்றாள். அவர், “சரி சொல்” என்றார். 18  அப்போது அவள், “அந்தக் காலத்தில், ‘ஆபேலுக்குப் போய் ஆலோசனை கேளுங்கள். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்’ என்று சொல்வார்கள். 19  இஸ்ரவேலில் உண்மையாகவும் சமாதானமாகவும் வாழ்கிற ஆட்களின் சார்பாகப் பேசுகிறேன். இஸ்ரவேலில் இருக்கிற ஒரு முக்கியமான* நகரத்தை ஒழித்துக்கட்ட* பார்க்கிறீர்களே. யெகோவாவின் மக்களை*+ அழிப்பது நியாயமா?” என்று கேட்டாள். 20  அதற்கு யோவாப், “இந்த நகரத்தை அழிக்க வேண்டுமென்ற எண்ணமே எனக்குக் கிடையாது. 21  நான் அதற்காக இங்கே வரவில்லை. எப்பிராயீம் மலைப்பகுதியைச்+ சேர்ந்த பிக்கிரியின் மகன் சேபா,+ தாவீது ராஜாவை எதிர்த்துக் கலகம் செய்திருக்கிறான்.* அவன் ஒருவனை மட்டும் ஒப்படைத்துவிட்டால் நான் இங்கிருந்து போய்விடுவேன்” என்று சொன்னார். அதற்கு அந்தப் பெண், “சரி, அவனுடைய தலையை மதில் மேலிருந்து தூக்கியெறிகிறோம்” என்று சொன்னாள். 22  புத்திசாலியான அந்தப் பெண் உடனே உள்ளே போய் ஊர்மக்கள் எல்லாரிடமும் விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடம் தூக்கிப் போட்டார்கள். அப்போது, அவர் ஊதுகொம்பை எடுத்து ஊதினார். உடனே ஆட்கள் அங்கிருந்து கலைந்து தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பினார்கள்.+ யோவாப் எருசலேமில் இருந்த ராஜாவிடம் வந்தார். 23  இஸ்ரவேலின் முழு படைக்கும் யோவாப் தளபதியாக இருந்தார்.+ யோய்தாவின்+ மகன் பெனாயா+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவராக இருந்தார்.+ 24  அடிமை வேலை வாங்கப்பட்ட ஆட்களுக்கு அதோராம்+ அதிகாரியாக இருந்தார்; அகிலூத்தின் மகன் யோசபாத் பதிவாளராக இருந்தார்.+ 25  சேவா செயலாளராக இருந்தார்; சாதோக்கும்+ அபியத்தாரும்+ குருமார்களாக இருந்தார்கள். 26  யாவீரியனாகிய ஈரா தாவீதின் முக்கிய மந்திரியாக* இருந்தார்.

அடிக்குறிப்புகள்

அல்லது, “கூடாரங்களுக்குப் போய்விடுங்கள்.”
நே.மொ., “உன் எஜமானின்.”
அநேகமாக, “அபிசாய்.”
நே.மொ., “தாய் போன்ற.”
நே.மொ., “விழுங்க.”
நே.மொ., “சொத்தை.”
நே.மொ., “கை ஓங்கியிருக்கிறான்.”
நே.மொ., “தாவீதின் குருவாக.”