2 சாமுவேல் 24:1-25

  • மக்களைக் கணக்கெடுத்து தாவீது பாவம் செய்கிறார் (1-14)

  • கொள்ளைநோயால் 70,000 பேர் சாகிறார்கள் (15-17)

  • தாவீது பலிபீடம் கட்டுகிறார் (18-25)

    • இலவசமாக வாங்கி பலி கொடுக்கக் கூடாது (24)

24  இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்கு மறுபடியும் பயங்கர கோபம் வந்தது.+ ஏனென்றால், “நீங்கள் போய் இஸ்ரவேலையும் யூதாவையும் கணக்கெடுங்கள்”+ என்று உத்தரவிடும்படி தாவீது தூண்டப்பட்டிருந்தார். அவர்களுக்கு விரோதமாகச் செயல்படுவதற்கு ஒருவன் அவரைத் தூண்டியிருந்தான்.*+  ராஜா தன்னோடு இருந்த படைத் தளபதி யோவாபிடம்,+ “தயவுசெய்து, தாண்முதல் பெயெர்-செபாவரை+ இருக்கிற எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் போய் மக்களை* பெயர்ப்பதிவு செய்து, என்னிடம் வந்து சொல்லுங்கள். மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொன்னார்.  ஆனால் யோவாப், “ராஜாவே, உங்கள் கடவுளாகிய யெகோவா இந்த மக்களை இன்னும் நூறு மடங்கு பெருகச் செய்வார்; அதை என் எஜமானாகிய நீங்களே பார்ப்பீர்கள். அதனால் ராஜாவே, என் எஜமானே, ஏன் இப்படியொரு காரியத்தைச் செய்ய விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.  ஆனால், யோவாபும் மற்ற படைத் தலைவர்களும் சொன்ன வார்த்தைகள் எடுபடவில்லை, ராஜாவின் வார்த்தைதான் ஜெயித்தது. அதனால், இஸ்ரவேல் மக்களைப் பெயர்ப்பதிவு செய்வதற்காக யோவாபும் மற்ற படைத் தலைவர்களும் புறப்பட்டுப் போனார்கள்.+  அவர்கள் யோர்தானைக் கடந்து ஆரோவேரில்+ தங்கினார்கள், பள்ளத்தாக்கின்* நடுவே இருந்த நகரத்தின் வலது பக்கத்தில்* தங்கினார்கள்; பின்பு, காத் கோத்திரத்தாரின் பிரதேசத்துக்கும் யாசேருக்கும்+ போனார்கள்.  அடுத்ததாக, கீலேயாத்துக்கும்+ தாதீம்-ஒத்சி பகுதிக்கும் போனார்கள்; தாண்-யானுக்குப் போய் அங்கிருந்து சுற்றி சீதோனுக்குப்+ போனார்கள்.  அதன் பின்பு, தீரு கோட்டைக்கும்+ ஏவியர்களுடைய+ எல்லா நகரங்களுக்கும் கானானியர்களுடைய எல்லா நகரங்களுக்கும் போனார்கள்; கடைசியாக நெகேபுக்கு,+ அதாவது யூதா தேசத்திலுள்ள பெயெர்-செபாவுக்கு,+ போனார்கள்.  இப்படி தேசமெங்கும் போய்விட்டு, ஒன்பது மாதங்கள் 20 நாட்களுக்குப் பின்பு எருசலேமுக்கு வந்துசேர்ந்தார்கள்.  பெயர்ப்பதிவு செய்யப்பட்ட மக்கள் மொத்தம் எத்தனை பேர் என்பதை ராஜாவிடம் யோவாப் தெரிவித்தார். இஸ்ரவேலில் வாளேந்திய வீரர்கள் மொத்தம் 8,00,000 பேர் இருந்தார்கள்; யூதாவில் 5,00,000 ஆண்கள் இருந்தார்கள்.+ 10  மக்களைக் கணக்கெடுத்த பின்பு தாவீதின் மனம் அடித்துக்கொண்டே* இருந்தது.+ அதனால் தாவீது யெகோவாவிடம், “இந்தக் காரியத்தைச் செய்ததன் மூலம் நான் பெரிய பாவம் செய்துவிட்டேன்.+ யெகோவாவே, தயவுசெய்து அடியேனின் தவறை மன்னித்துவிடுங்கள்;+ நான் ரொம்ப முட்டாள்தனமாக நடந்துகொண்டேன்”+ என்று சொன்னார். 11  தாவீது காலையில் எழுந்தபோது, தாவீதின் தரிசனக்காரரான காத் தீர்க்கதரிசியிடம்+ யெகோவா ஒரு செய்தி சொன்னார். 12  “நீ தாவீதிடம் போய், ‘உனக்கு முன்னால் மூன்று தண்டனைகளை வைக்கிறேன். எது வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக்கொள்’ என்று யெகோவா சொல்கிறார் என்று சொல்”+ என்றார். 13  அதனால் அவர் தாவீதிடம் வந்து, “உங்களுடைய தேசத்தில் ஏழு வருஷங்கள் பஞ்சம் வர வேண்டுமா?+ அல்லது உங்களைத் துரத்துகிற எதிரிகளுக்குப் பயந்து நீங்கள் மூன்று மாதங்களுக்குத் தப்பித்து ஓட வேண்டுமா?+ அல்லது உங்கள் தேசத்தில் மூன்று நாட்களுக்குக் கொள்ளைநோய் வர வேண்டுமா?+ என்னை அனுப்பியவருக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதை நீங்கள் நன்றாக யோசித்துச் சொல்லுங்கள்” என்றார். 14  அப்போது தாவீது காத் தீர்க்கதரிசியிடம், “நான் ரொம்ப நொந்துபோயிருக்கிறேன். யெகோவா மகா இரக்கமுள்ளவர்,+ அதனால், தயவுசெய்து அவரே நம்மைத் தண்டிக்கட்டும்;+ மனிதர்களின் கையில் நம்மை விட்டுவிட வேண்டாம்”+ என்று சொன்னார். 15  அப்போது, காலை தொடங்கி ஒரு குறிப்பிட்ட நேரம்வரை இஸ்ரவேலர்களை யெகோவா கொள்ளைநோயால் தாக்கினார்;+ அதனால், தாண்முதல் பெயெர்-செபாவரை+ 70,000 பேர் செத்தார்கள்.+ 16  எருசலேமை அழிக்க அந்த நகரத்துக்கு நேராக தேவதூதர் கைநீட்டினார்; கொள்ளைநோயால் மக்கள் தாக்கப்படுவதை நினைத்து யெகோவா வருத்தப்பட்டார்;*+ அதனால் அழிவைக் கொண்டுவந்த அந்தத் தேவதூதரிடம், “போதும், உன் கையைக் கீழே போடு!” என்று சொன்னார். அப்போது, எபூசியனான+ அர்வனாவின் களத்துமேட்டுக்குப் பக்கத்தில் யெகோவாவின் தூதர் இருந்தார்.+ 17  மக்களை அழித்துக்கொண்டிருந்த தேவதூதரை தாவீது பார்த்தபோது அவர் யெகோவாவிடம், “நான்தானே பாவம் செய்தேன், நான்தானே தவறு செய்தேன்; இந்த ஆடுகள்+ என்ன தவறு செய்தன? தயவுசெய்து நீங்கள் என்னையும் என் தகப்பன் குடும்பத்தையும் தண்டியுங்கள்”+ என்று சொன்னார். 18  அதனால் அன்று காத் தீர்க்கதரிசி தாவீதிடம் வந்து, “நீ போய் எபூசியனான அர்வனாவின் களத்துமேட்டில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டு”+ என்று சொன்னார். 19  காத் தீர்க்கதரிசி மூலம் யெகோவா கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தாவீது அங்கே போனார். 20  ராஜாவும் அவருடைய ஊழியர்களும் தன்னிடம் வருவதை அர்வனா பார்த்தார்; உடனே களத்துமேட்டிலிருந்து வெளியே வந்து ராஜா முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார். 21  பின்பு அவர், “ராஜாவே, என் எஜமானே, நீங்கள் ஏன் இந்த அடியேனைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு தாவீது, “இந்தக் களத்துமேட்டை உன்னிடமிருந்து வாங்க வந்திருக்கிறேன்; இங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டப்போகிறேன்; அப்போதுதான், மக்களைத் தாக்குகிற கொள்ளைநோயைக் கடவுள் நிறுத்துவார்”+ என்று சொன்னார். 22  அப்போது அர்வனா தாவீதிடம், “ராஜாவே, என் எஜமானே, தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள், உங்களுடைய விருப்பப்படியே பலி கொடுங்கள். இதோ, தகன பலி கொடுப்பதற்கு மாடுகள் இருக்கின்றன, போரடிக்கும் பலகையையும் நுகத்தடியையும் விறகாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். 23  ராஜாவே, இவை எல்லாவற்றையும் உங்களுக்குத் தருகிறேன்”* என்று சொன்னார். அதோடு அவர், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்” என்றும் சொன்னார். 24  ஆனால் ராஜா, “இல்லை, நான் உன்னிடமிருந்து விலைக்குத்தான் வாங்குவேன். இலவசமாக வாங்கி என் கடவுளாகிய யெகோவாவுக்குத் தகன பலிகளைக் கொடுக்க மாட்டேன்” என்று அர்வனாவிடம் சொன்னார். அதனால், தாவீது அந்தக் களத்துமேட்டையும் மாடுகளையும் 50 வெள்ளி சேக்கலுக்கு* வாங்கினார்.+ 25  அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி,+ தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார். அப்போது, தேசத்துக்காக அவர்கள் செய்த மன்றாட்டை யெகோவா கேட்டு,+ இஸ்ரவேலர்கள்மீது கொண்டுவந்த தண்டனையை நிறுத்தினார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஒருவனால் தாவீது தூண்டப்பட்டிருந்தார்.”
அநேகமாக, படையில் சேருவதற்கான வயதை எட்டிய ஆண்களைக் குறிக்கலாம்.
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.”
வே.வா., “தென் திசையில்.”
வே.வா., “மனசாட்சி உறுத்திக்கொண்டே.”
வே.வா., “துக்கப்பட்டார்.”
நே.மொ., “அர்வனா தருகிறார்.”
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.