2 சாமுவேல் 5:1-25

  • இஸ்ரவேல் முழுவதுக்கும் தாவீது ராஜாவாகிறார் (1-5)

  • எருசலேம் கைப்பற்றப்படுகிறது (6-16)

    • சீயோன், ‘தாவீதின் நகரம்’ (7)

  • பெலிஸ்தியர்களை தாவீது தோற்கடிக்கிறார் (17-25)

5  பின்பு, இஸ்ரவேல் கோத்திரத்தார் எல்லாரும் எப்ரோனில் இருந்த தாவீதிடம்+ வந்து, “நாங்கள் உங்களுடைய இரத்த சொந்தம்.*+  சவுல் எங்களுக்கு ராஜாவாக இருந்தபோது, நீங்கள்தான் இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கினீர்கள்.+ யெகோவா உங்களிடம், ‘நீதான் என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பனாக இருப்பாய், அவர்களுக்குத் தலைவனாக இருப்பாய்’+ என்று சொல்லியிருக்கிறாரே” என்றார்கள்.  பின்பு, இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது ராஜா எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்.+ அதன் பின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+  ராஜாவானபோது தாவீதுக்கு 30 வயது; அவர் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+  யூதா கோத்திரத்தாரை எப்ரோனிலிருந்து ஏழு வருஷம் ஆறு மாதம் ஆட்சி செய்தார். அதன் பின்பு, இஸ்ரவேலையும் யூதாவையும் எருசலேமிலிருந்து+ 33 வருஷங்கள் ஆட்சி செய்தார்.  எருசலேமில் குடியிருந்த எபூசியர்களுக்கு+ எதிராக ராஜாவும் அவருடைய வீரர்களும் போர் செய்யப் போனார்கள். அப்போது தாவீதிடம் அந்த எதிரிகள், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!+ குருடர்களும் முடவர்களுமே உன்னை விரட்டியடித்துவிடுவார்கள்” என்று கேலி செய்தார்கள். ‘தாவீது இங்கே வரவே முடியாது!’ என்று அவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.  ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார். அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.  அன்று தாவீது தன் வீரர்களிடம், “எபூசியர்களைத் தாக்குகிறவர்கள் தண்ணீர்ச் சுரங்கம் வழியாகப் போய் தாவீது வெறுக்கிற அந்த ‘முடவர்களையும் குருடர்களையும்’ தாக்க வேண்டும்” என்று சொன்னார். அதனால்தான், “குருடர்களும் முடவர்களும் வீட்டுக்குள் வரவே கூடாது” என்று சொல்லப்படுகிறது.  பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது.* பின்பு, மில்லோவை*+ சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்.+ 10  தாவீது மேலும் மேலும் வலிமை அடைந்துகொண்டே போனார்.+ பரலோகப் படைகளின் கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.+ 11  தீருவின் ராஜாவாகிய ஈராம்+ தாவீதிடம் தூதுவர்களை அனுப்பினார்; அதன் பின்பு, தேவதாரு மரங்களையும்+ தச்சர்களையும் மதில் கட்டுவதற்குக் கொத்தனார்களையும் அனுப்பிவைத்தார். அவர்கள் தாவீதுக்கு ஓர் அரண்மனையை* கட்ட ஆரம்பித்தார்கள்.+ 12  இஸ்ரவேல்மீது தன்னுடைய ஆட்சியை யெகோவாதான் வலுப்படுத்தினார்+ என்பதையும், அவருடைய மக்களாகிய இஸ்ரவேலர்களுக்காகத்+ தன்னுடைய ஆட்சியை அவர்தான் உயர்த்தினார்+ என்பதையும் தாவீது புரிந்துகொண்டார். 13  எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு வந்த பின்பு, தாவீது நிறைய மனைவிகளையும் மறுமனைவிகளையும் சேர்த்துக்கொண்டார்;+ அவருக்கு நிறைய மகன்களும் மகள்களும் பிறந்தார்கள்.+ 14  எருசலேமில் அவருக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான்,+ சாலொமோன்,+ 15  இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16  எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத். 17  தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை+ பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் எல்லாரும் வந்தார்கள்.+ இது தாவீதின் காதுக்கு எட்டியதும் மறைவான ஓரிடத்துக்குப் போனார்.+ 18  பெலிஸ்தியர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கு+ முழுவதும் பரவினார்கள். 19  அப்போது தாவீது யெகோவாவிடம், “நான் இந்த பெலிஸ்தியர்களோடு போர் செய்யப் போகலாமா? அவர்களை என் கையில் கொடுப்பீர்களா?” என்று விசாரித்தார்.+ அதற்கு யெகோவா, “போ, பெலிஸ்தியர்களை நிச்சயம் உன் கையில் கொடுப்பேன்”+ என்று சொன்னார். 20  அதனால், தாவீது பாகால்-பிராசீமுக்கு வந்து பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். அப்போது, “சீறிப்பாயும் வெள்ளம்போல் யெகோவா எனக்கு முன்னால் போய் என் எதிரிகளை அழித்துப்போட்டார்”+ என்று சொன்னார். அதனால் அந்த இடத்துக்கு பாகால்-பிராசீம்*+ என்று பெயர் வைத்தார். 21  பெலிஸ்தியர்கள் தங்களுடைய சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். தாவீதும் அவருடைய வீரர்களும் அவற்றை எடுத்து அழித்துப்போட்டார்கள். 22  பின்பு, பெலிஸ்தியர்கள் மறுபடியும் திரண்டு வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்+ பரவினார்கள். 23  தாவீது யெகோவாவிடம் விசாரித்தபோது, “நீ நேரடியாக எதிர்த்துப் போகாதே. பின்பக்கமாகச் சுற்றிப்போய் பேக்கா புதர்ச்செடிகளுக்குப் பின்னால் ஒளிந்துகொள். பின்பு, வெளியே வந்து அவர்களோடு போர் செய். 24  படைகள் அணிவகுத்து வருகிற சத்தம் பேக்கா புதர்ச்செடிகளின் மேலே கேட்கும்போது உடனே தாக்கு. ஏனென்றால், பெலிஸ்தியர்களின் படையைத் தாக்குவதற்கு யெகோவா உனக்கு முன்னால் போயிருப்பார்” என்று சொன்னார். 25  யெகோவா கட்டளையிட்டபடியே தாவீது செய்தார். கெபாமுதல்+ கேசேர்வரை+ பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே போனார்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “எலும்பும் சதையுமாக இருக்கிறோம்.”
வே.வா., “மூப்பர்கள்.”
அல்லது, “அதை ‘தாவீதின் நகரம்’ என்று அவர் அழைத்தார்.”
அர்த்தம், “மண்மேடு.” இது ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம்.
நே.மொ., “ஒரு வீட்டை.”
அர்த்தம், “சீறிப் பாயும் தலைவர்.”