தீமோத்தேயுவுக்கு இரண்டாம் கடிதம் 4:1-22

  • “உன் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடி” (1-5)

    • கடவுளின் வார்த்தையை அவசர உணர்வோடு பிரசங்கி (2)

  • “சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்” (6-8)

  • தனிப்பட்ட குறிப்புகள் (9-18)

  • முடிவான வாழ்த்துக்கள் (19-22)

4  கடவுளுக்கு முன்பாகவும், உயிருள்ளவர்களையும் இறந்தவர்களையும்+ நியாயந்தீர்க்கப்போகிற கிறிஸ்து இயேசுவுக்கு+ முன்பாகவும், கிறிஸ்துவின் வெளிப்படுதலின் பேரிலும்,+ அவருடைய அரசாங்கத்தின்+ பேரிலும் நான் உனக்கு ஆணையிடுகிறேன்:  கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி;+ சாதகமான காலத்திலும் சரி, பாதகமான காலத்திலும் சரி, அவசர உணர்வோடு பிரசங்கி; கற்பிக்கும் கலையைப்+ பயன்படுத்தி பொறுமையோடு கண்டித்துப் பேசு,+ கடுமையாக எச்சரி, அறிவுரை சொல்.  ஏனென்றால், ஒரு காலம் வரும்; அப்போது, பயனுள்ள* போதனைகளை+ அவர்கள் ஒதுக்கித்தள்ளுவார்கள்; அதற்குப் பதிலாக, தங்கள் காதுகளுக்கு இனிமையாய் இருக்கும் விஷயங்களைக் கேட்பதற்காக, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தங்களுக்கென்று போதகர்களைச் சேர்த்துக்கொள்வார்கள்.+  அதோடு, சத்தியத்தைக் கேட்காமல் கட்டுக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்பார்கள்.  நீயோ, எல்லா விஷயங்களிலும் யோசிக்கும் திறனை நன்றாகப் பயன்படுத்து; கஷ்டங்களைச் சகித்துக்கொள்,+ நற்செய்தியாளரின் வேலையைச் செய்,* உன் ஊழியத்தை முழுமையாகச் செய்து முடி.+  ஏனென்றால், நான் ஏற்கெனவே என்னைத் திராட்சமது காணிக்கையைப் போல் ஊற்றிவிட்டேன்;+ நான் விடுதலை பெறுகிற நேரம்+ நெருங்கிவிட்டது.  சிறந்த போராட்டத்தைப் போராடியிருக்கிறேன்;+ என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன்,+ கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்.  இப்போதுமுதல், நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது;+ நீதியுள்ள நீதிபதியான நம் எஜமான்+ நியாயத்தீர்ப்பு நாளில் அதை எனக்குப் பரிசாகத் தருவார்;+ எனக்கு மட்டுமல்ல, அவர் வெளிப்படப்போவதை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற எல்லாருக்கும் தருவார்.  சீக்கிரமாக என்னிடம் வருவதற்கு உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய். 10  ஏனென்றால், தேமா+ இந்த உலகத்தின்* மேல் ஆசை வைத்து என்னைவிட்டுப் பிரிந்து தெசலோனிக்கேவுக்குப் போய்விட்டான். கிரெஸ்கே கலாத்தியாவுக்கும், தீத்து தல்மாத்தியாவுக்கும் போயிருக்கிறார்கள். 11  லூக்கா மட்டும் என்னோடு இருக்கிறார். மாற்குவை உன்னோடு கூட்டிக்கொண்டு வா. ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார். 12  தீகிக்குவை+ நான் எபேசுவுக்கு அனுப்பியிருக்கிறேன். 13  துரோவாவில் உள்ள கார்புவிடம் நான் விட்டுவந்த என் சால்வையையும் சுருள்களையும், முக்கியமாகத் தோல் சுருள்களையும், நீ வரும்போது எடுத்துக்கொண்டு வா. 14  செம்புக் கொல்லனாகிய அலெக்சந்தர் எனக்கு நிறைய கெடுதல்களைச் செய்தான்; அவன் செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா* பதிலடி கொடுப்பார்.+ 15  நீயும் அவனிடம் எச்சரிக்கையாக இரு. ஏனென்றால், நம்முடைய செய்தியை அவன் தீவிரமாக எதிர்த்தான். 16  முதல் தடவை நான் என்னுடைய தரப்பில் வாதாடியபோது, எனக்கு ஆதரவாக யாரும் வரவில்லை; எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்—அந்தக் குற்றம் அவர்களுடைய கணக்கில் சேராமல் இருக்கட்டும்— 17  ஆனால், என் மூலம் பிரசங்க வேலை முழுமையாக நிறைவேறுவதற்காகவும், எல்லா தேசத்து மக்களும் அந்தச் செய்தியைக் கேட்பதற்காகவும்+ நம் எஜமான் என் பக்கத்தில் நின்று, எனக்குப் பலம் கொடுத்தார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் காப்பாற்றப்பட்டேன்.+ 18  பொல்லாத செயல்கள் எல்லாவற்றிலிருந்தும் நம் எஜமான் என்னை விடுவித்து, காப்பாற்றி, அவருடைய பரலோக அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்வார்.+ அவருக்கே என்றென்றும் மகிமை சொந்தம். ஆமென்.* 19  பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும்+ ஒநேசிப்போருவின்+ வீட்டில் இருக்கிறவர்களுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல். 20  எரஸ்து+ கொரிந்து நகரத்தில் தங்கிவிட்டார்; துரோப்பீமுவுக்கு+ உடல்நிலை சரியில்லாததால், அவரை மிலேத்துவில் விட்டுவிட்டு வந்தேன். 21  குளிர் காலத்துக்கு முன்பு இங்கே வர உன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய். ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கிலவுதியாளும், மற்ற சகோதரர்கள் எல்லாரும் உனக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 22  நல்ல மனப்பான்மையை வெளிக்காட்டுகிற உன்னோடு நம் எஜமான் இருக்கட்டும். அவருடைய அளவற்ற கருணை உன்மீது இருக்கட்டும்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “ஆரோக்கியமான.”
வே.வா., “நல்ல செய்தியைத் தொடர்ந்து பிரசங்கி.”
வே.வா., “சகாப்தத்தின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
இணைப்பு A5-ஐப் பாருங்கள்.
அதாவது, “அப்படியே ஆகட்டும்.”