2 நாளாகமம் 1:1-17

  • ஞானத்துக்காக சாலொமோன் வேண்டுகிறார் (1-12)

  • சாலொமோனின் செல்வம் (13-17)

1  தாவீதின் மகன் சாலொமோனுடைய ஆட்சி மேலும் மேலும் உறுதியாக ஆனது. அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார், அவருக்கு அதிக பேரும் புகழும் கிடைக்கச் செய்தார்.+  இஸ்ரவேல் முழுவதிலும் இருந்த நூறு வீரர்களுக்குத் தலைவர்களையும் ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்களையும் நீதிபதிகளையும் இஸ்ரவேலின் எல்லா கோத்திரத் தலைவர்களையும் தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும் சாலொமோன் வரவழைத்தார்.  பின்பு, சாலொமோனும் சபையார் எல்லாரும் கிபியோனில் இருந்த ஆராதனை மேட்டுக்குப் போனார்கள்.+ யெகோவாவின் ஊழியரான மோசே வனாந்தரத்தில் இருந்தபோது செய்த உண்மைக் கடவுளின் சந்திப்புக் கூடாரம் அங்கேதான் இருந்தது.  ஆனால் தாவீது, உண்மைக் கடவுளின் பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ எருசலேமில் தான் தயார் செய்திருந்த இடத்துக்குக் கொண்டுவந்திருந்தார். அதற்கென்று தான் போட்டிருந்த கூடாரத்தில் அதை வைத்திருந்தார்.+  ஹூரின் பேரனும் ஊரியின் மகனுமான பெசலெயேல்+ செய்திருந்த செம்புப் பலிபீடம்+ யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்தது. சாலொமோனும் சபையாரும் அந்தக் கூடாரத்துக்கு முன்னால் வேண்டிக்கொள்வது* வழக்கம்.  சந்திப்புக் கூடாரத்துக்கு முன்னால் இருந்த செம்புப் பலிபீடத்தில், யெகோவாவுக்குமுன் 1,000 தகன பலிகளை சாலொமோன் செலுத்தினார்.+  அன்றைக்கு ராத்திரி சாலொமோனின் கனவில் கடவுள் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும், கேள்”+ என்றார்.  அதற்கு சாலொமோன், “என் அப்பா தாவீதுமேல் நீங்கள் அளவுகடந்த அன்பை* காட்டியிருக்கிறீர்கள்.+ அவருடைய இடத்தில் என்னை ராஜாவாக உட்கார வைத்திருக்கிறீர்கள்.+  யெகோவா தேவனே, என் அப்பா தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள்.+ ஏனென்றால், பூமியிலுள்ள மணலைப் போல் ஏராளமாக இருக்கிற மக்களுக்கு என்னை ராஜாவாக ஆக்கியிருக்கிறீர்கள்.+ 10  இந்த மக்களை நல்ல முறையில் வழிநடத்த இப்போது எனக்கு ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள்.+ இல்லாவிட்டால், இத்தனை ஏராளமான மக்களுக்கு என்னால் எப்படி நீதி வழங்க முடியும்?”+ என்றார். 11  அதற்குக் கடவுள், “செல்வத்தையோ பொருளையோ பேர்புகழையோ எதிரிகளின் உயிரையோ நீண்ட ஆயுசையோ நீ கேட்கவில்லை. அதற்குப் பதிலாக, என்னுடைய மக்களுக்கு* நீதி வழங்க ஞானத்தையும் அறிவையும் கேட்டிருக்கிறாய்.+ அதனால், நீ மனதார ஆசைப்பட்டபடியே, 12  ஞானத்தையும் அறிவையும் உனக்குத் தருவேன். அதோடு, உனக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவுக்கும் இல்லாத அளவுக்குச் செல்வத்தையும் பொருளையும் பேர்புகழையும் தருவேன்”+ என்று சொன்னார். 13  பின்பு சாலொமோன் கிபியோனிலிருந்த ஆராதனை மேட்டிலிருந்து,+ அதாவது சந்திப்புக் கூடாரத்திலிருந்து, புறப்பட்டு எருசலேமுக்கு வந்தார்; அவர் இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்தார். 14  ரதங்களையும் குதிரைகளையும்* சாலொமோன் ஏராளமாகச் சேர்த்துக்கொண்டே இருந்தார். அவரிடம் 1,400 ரதங்களும் 12,000 குதிரைகளும்*+ இருந்தன. ரதங்களுக்கான நகரங்களிலும்+ எருசலேமில் ராஜா குடியிருந்த இடத்துக்குப் பக்கத்திலும் அவற்றை நிறுத்தி வைத்தார்.+ 15  தங்கத்தையும் வெள்ளியையும் கற்களைப் போலவும், தேவதாரு மரங்களை சேப்பெல்லாவிலுள்ள காட்டத்தி மரங்களைப் போலவும் சாலொமோன் ராஜா எருசலேமில் ஏராளமாகக் கிடைக்கச் செய்தார்.+ 16  எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகளை சாலொமோன் வைத்திருந்தார்.+ ராஜாவின் வியாபாரிகள் குதிரைக் கூட்டங்களை* மொத்த விலைக்கு வாங்குவார்கள்.+ 17  எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரதத்தின் விலை 600 வெள்ளிக் காசுகள், ஒரு குதிரையின் விலை 150 வெள்ளிக் காசுகள். பின்பு, இவற்றை சீரியாவின் ராஜாக்கள் எல்லாருக்கும், ஏத்திய ராஜாக்கள் எல்லாருக்கும் ஏற்றுமதி செய்வார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “விசாரிப்பது.”
வே.வா., “மாறாத அன்பை.”
நே.மொ., “எந்த மக்களுக்கு உன்னை ராஜாவாக நியமித்தேனோ அந்த மக்களுக்கு.”
வே.வா., “குதிரைவீரர்களையும்.”
வே.வா., “குதிரைவீரர்களும்.”
அல்லது, “குதிரைக் கூட்டங்களை எகிப்திலிருந்தும் கியூவிலிருந்தும்; ராஜாவின் வியாபாரிகள் அவற்றை கியூவிலிருந்து.” கியூ என்பது சிலிசியாவைக் குறிக்கலாம்.