2 நாளாகமம் 14:1-15

  • அபியா இறந்துபோகிறார் (1)

  • ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (2-8)

  • ஆசா 10,00,000 எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்கிறார் (9-15)

14  அபியா இறந்த* பின்பு, ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆசா ராஜாவானார்; அவருடைய ஆட்சியில், பத்து வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது.  ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களைச் செய்தார், சரியான செயல்களைச் செய்தார்.  பொய் தெய்வங்களின் பலிபீடங்களையும் ஆராதனை மேடுகளையும் அழித்துப்போட்டார்,+ பூஜைத் தூண்களை நொறுக்கிப்போட்டார்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார்.+  அதோடு, தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை வழிபட வேண்டும் என்றும், அவர் தந்த திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யூதா மக்களிடம் சொன்னார்.  யூதாவின் எல்லா நகரங்களிலும் இருந்த ஆராதனை மேடுகளையும் தூபபீடங்களையும் அழித்துப்போட்டார்.+ அவருடைய ஆட்சியில் எதிரிகளின் தொல்லையே இருக்கவில்லை.  தேசத்தில் அமைதி நிலவ யெகோவா உதவி செய்ததால் அந்தக் காலப்பகுதியில் போரோ எதிரிகளின் தொல்லையோ இருக்கவில்லை;+ அதனால், யூதாவில் மதில் சூழ்ந்த நகரங்களை அவர் கட்டினார்.+  அவர் யூதா மக்களிடம், “இந்த நகரங்களை வலுப்படுத்தி, சுற்றிலும் மதில்களையும் கோபுரங்களையும் கட்டலாம்,+ கதவுகளையும்* தாழ்ப்பாள்களையும் வைக்கலாம். நம்முடைய கடவுளான யெகோவாவை நாம் தேடுவதால், தேசம் முழுவதும் நம்முடைய கையில்தான் இருக்கிறது. நாம் அவரைத் தேடுவதால், எந்தப் பக்கத்திலிருந்தும் எதிரிகளின் தொல்லை இல்லாமல் நம்மை நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார்” என்று சொன்னார். அவர்கள் அந்த நகரங்களை வெற்றிகரமாகக் கட்டி முடித்தார்கள்.+  யூதாவைச் சேர்ந்த 3,00,000 வீரர்கள் ஆசாவின் படையில் இருந்தார்கள். அவர்களிடம் பெரிய கேடயங்களும் ஈட்டிகளும் இருந்தன. பென்யமீனைச் சேர்ந்த 2,80,000 மாவீரர்களும் இருந்தார்கள்; அவர்களிடம் சிறிய கேடயங்களும்* வில்லுகளும் இருந்தன.+  பின்பு, எத்தியோப்பியனான சேராகு 10,00,000 வீரர்களுடனும் 300 ரதங்களுடனும்+ யூதாமீது படையெடுத்து வந்தான். அவன் மரேஷாவுக்கு+ வந்தபோது, 10  ஆசா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார்; அவருடைய வீரர்கள் மரேஷாவுக்குப் பக்கத்தில் இருக்கிற செப்பத்தா பள்ளத்தாக்கில் அணிவகுத்து நின்றார்கள். 11  அப்போது, ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவிடம் மன்றாடினார்.+ “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும்.+ அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்,+ இந்தக் கூட்டத்தை எதிர்த்துப் போர் செய்ய உங்கள் பெயரில் வந்திருக்கிறோம்.+ யெகோவாவே, நீங்கள்தான் எங்களுடைய கடவுள். அற்ப மனிதன் உங்களை ஜெயிக்க விட்டுவிடாதீர்கள்”+ என்று கெஞ்சினார். 12  அப்போது, எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்க ஆசாவுக்கும் யூதா வீரர்களுக்கும் யெகோவா உதவி செய்தார். அதனால் எத்தியோப்பியர்கள் தோற்று ஓடினார்கள்.+ 13  ஆசாவும் அவருடைய ஆட்களும் எத்தியோப்பியர்களைத் துரத்திக்கொண்டு போனார்கள். கேரார்வரை+ அவர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே போனார்கள். யெகோவாவும் அவருடைய படைவீரர்களும் எத்தியோப்பியர்களை அடியோடு அழித்துப்போட்டார்கள், ஒருவர்கூட உயிர்தப்பவில்லை. அதன் பின்பு, யூதா வீரர்கள் ஏராளமான பொருள்களை அவர்களிடமிருந்து கைப்பற்றி வந்தார்கள். 14  அதோடு, கேராரைச் சுற்றியுள்ள எல்லா நகரங்களையும் தாக்கினார்கள்; ஏனென்றால், யெகோவாவை நினைத்து அந்த நகரத்தில் இருந்தவர்கள் கதிகலங்கிப்போயிருந்தார்கள். அங்கே ஏகப்பட்ட பொருள்கள் இருந்தன, அதனால் யூதா வீரர்கள் அவற்றையெல்லாம் கைப்பற்றிக் கொண்டுவந்தார்கள். 15  அதுமட்டுமல்ல, மேய்ப்பர்களுடைய கூடாரங்களைக் கீழே தள்ளி ஏராளமான ஆடுகளையும் ஒட்டகங்களையும் ஓட்டிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
நே.மொ., “இரட்டைக் கதவுகளையும்.”
பொதுவாக, வில்வீரர்கள் இவற்றை வைத்திருப்பார்கள்.