2 நாளாகமம் 15:1-19
-
ஆசா செய்த சீர்திருத்தங்கள் (1-19)
15 அப்போது, ஓதேத்தின் மகன் அசரியாமீது கடவுளுடைய சக்தி வந்தது.
2 அதனால் அவர் ஆசாவிடம் போய், “ஆசா ராஜாவே! யூதா, பென்யமீன் மக்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் யெகோவாவின் பக்கம் இருக்கும்வரை அவர் உங்களுடன் இருப்பார்.+ அவரைத் தேடினால் அவரைக் கண்டடைய உங்களுக்கு உதவி செய்வார்.+ நீங்கள் அவரை விட்டுவிட்டால், அவரும் உங்களை விட்டுவிடுவார்.+
3 பல காலமாக இஸ்ரவேல் மக்கள் உண்மைக் கடவுளை வணங்காமல் இருந்தார்கள், குருமார்களும் அவரைப் பற்றிக் கற்றுக்கொடுக்காமல் இருந்தார்கள், மக்களும் திருச்சட்டத்தைப் பின்பற்றாமல் இருந்தார்கள்.+
4 ஆனால், கஷ்டம் வந்தபோது அவர்கள் மனம் திருந்தி, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைத் தேடினார்கள். அதனால், தன்னைக் கண்டடைய கடவுள் அவர்களுக்கு உதவி செய்தார்.+
5 அந்தக் காலத்தில் யாருமே பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியவில்லை. ஏனென்றால், இஸ்ரவேல் முழுவதும் குடியிருந்த மக்கள் மத்தியில் ஒரே கலவரமாக இருந்தது.
6 ஒரு கோத்திரத்தார் இன்னொரு கோத்திரத்தாரை அழித்தார்கள், ஒரு நகரத்தார் இன்னொரு நகரத்தாரை ஒழித்தார்கள். எல்லா விதமான கஷ்டங்களாலும் அவர்கள் நிம்மதியில்லாமல் தவிக்கும்படி கடவுள் அவர்களை விட்டுவிட்டிருந்தார்.+
7 ஆனால், நீங்கள் தைரியமாயிருங்கள், சோர்ந்துபோகாதீர்கள்;*+ உங்களுடைய செயல்களுக்குக் கைமேல் பலன் கிடைக்கும்” என்று சொன்னார்.
8 அசரியா சொன்ன விஷயங்களையும், ஓதேத் தீர்க்கதரிசி சொன்ன தீர்க்கதரிசனத்தையும் கேட்டவுடன் ஆசாவுக்குத் தைரியம் வந்தது. உடனே அவர் யூதா, பென்யமீன் நகரங்கள் எல்லாவற்றிலும் எப்பிராயீம் மலைப்பகுதியில் தான் கைப்பற்றிய நகரங்களிலும் இருந்த அருவருப்பான சிலைகளை அழித்துப்போட்டார்.+ யெகோவாவுடைய ஆலயத்தின் நுழைவு மண்டபத்துக்கு எதிரிலிருந்த யெகோவாவின் பலிபீடத்தைப் புதுப்பித்தார்.+
9 பின்பு யூதா, பென்யமீன் மக்களையும் எப்பிராயீம், மனாசே, சிமியோன்+ பகுதிகளிலிருந்து வந்து அவர்களோடு தங்கியிருந்த மற்ற தேசத்து மக்களையும் ஆசா ஒன்றுகூட்டினார்; அவருடைய கடவுளான யெகோவா அவருக்குத் துணையாக இருக்கிறார் என்று இவர்கள் கண்டு, பெருங்கூட்டமாக வந்து அவருடன் சேர்ந்துகொண்டிருந்தார்கள்.
10 ஆசா ஆட்சி செய்த 15-ஆம் வருஷம் மூன்றாம் மாதத்தில், அவர்கள் எல்லாரும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள்.
11 எதிரிகளிடமிருந்து பிடித்துவந்த ஆடுமாடுகளில் 700 மாடுகளையும் 7,000 ஆடுகளையும் அவர்கள் அன்றைக்கு யெகோவாவுக்குப் பலி கொடுத்தார்கள்.
12 அதோடு, முன்னோர்களின் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் தேடுவோம் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தார்கள்;+
13 பெரியவரோ சிறியவரோ, ஆணோ பெண்ணோ, இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைத் தேடாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார்கள்.+
14 எக்காளங்களும் ஊதுகொம்புகளும் முழங்க, சந்தோஷ ஆரவாரத்தோடு யெகோவாவுக்கு முன்னால் சத்தமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
15 இப்படி முழு இதயத்தோடு உறுதிமொழி எடுத்துக்கொண்டதாலும், ஆர்வத்தோடு கடவுளைத் தேடியதாலும், தன்னைக் கண்டடைய கடவுள் அவர்களுக்கு உதவியதாலும்+ யூதா மக்கள் எல்லாரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சுற்றியிருந்த எதிரிகளின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ யெகோவா அவர்களுக்கு உதவினார்.+
16 பூஜைக் கம்பத்தின்* வழிபாட்டுக்காக ஆசா ராஜாவின் பாட்டி மாக்காள்+ அருவருப்பான சிலையைச் செய்து வைத்திருந்ததால், ராஜமாதா* அந்தஸ்தை அவளிடமிருந்து பறித்துவிட்டார்.+ அருவருப்பான அந்தச் சிலையைத் தகர்த்துப்போட்டு, தூள்தூளாக்கி, கீதரோன் பள்ளத்தாக்கில் சுட்டெரித்தார்.+
17 ஆனால், இஸ்ரவேலில் இருந்த ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை.+ இருந்தாலும், ஆசா தன்னுடைய வாழ்நாளெல்லாம் கடவுளுக்கு முழு இதயத்தோடு உண்மையாக நடந்துகொண்டார்.+
18 தானும் தன்னுடைய அப்பாவும் கடவுளுக்கு அர்ப்பணித்திருந்த தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற சாமான்களையும் கொண்டுவந்து உண்மைக் கடவுளின் ஆலயத்தில் வைத்தார்.+
19 ஆசா ஆட்சி செய்த 35-ஆம் வருஷம்வரை தேசத்தில் போரே நடக்கவில்லை.+
அடிக்குறிப்புகள்
^ நே.மொ., “உங்களுடைய கைகளைத் தளர விடாதீர்கள்.”
^ சொல் பட்டியலைப் பாருங்கள்.
^ வே.வா., “ராணி.”