2 நாளாகமம் 20:1-37

  • பக்கத்து தேசங்கள் யூதாவை மிரட்டுகின்றன (1-4)

  • உதவி கேட்டு யோசபாத் ஜெபம் செய்கிறார் (5-13)

  • யெகோவாவிடமிருந்து பதில் (14-19)

  • யூதா அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறது (20-30)

  • யோசபாத்துடைய ஆட்சியின் முடிவு (31-37)

20  பின்பு, மோவாபியர்களும்+ அம்மோனியர்களும்+ யோசபாத்தை எதிர்த்துப் போர் செய்ய வந்தார்கள்; அவர்களுடன் அம்மோனிமியர்கள்* சிலரும் வந்தார்கள்.  அப்போது, “உங்களோடு போர் செய்ய கடலோர* பகுதியில் இருக்கிற ஏதோமிலிருந்து+ பெரிய படை வந்திருக்கிறது; அந்தப் படை அத்சாத்சோன்-தாமாரில், அதாவது என்-கேதியில்,+ முகாம்போட்டிருக்கிறது” என்ற செய்தி யோசபாத்துக்குக் கிடைத்தது.  அதைக் கேட்டதும் யோசபாத் பயந்துபோனார். யெகோவாவைத் தேட வேண்டுமென்று மனதில் தீர்மானித்தார்.+ யூதா மக்கள் எல்லாரும் விரதமிருக்க வேண்டுமென்று அறிவித்தார்.  பின்பு, யூதா மக்கள் யெகோவாவிடம் விசாரிப்பதற்காக ஒன்றுகூடி வந்தார்கள்.+ யூதாவின் எல்லா நகரங்களிலிருந்தும் யெகோவாவிடம் ஆலோசனை கேட்க வந்தார்கள்.  அப்போது, யெகோவாவுடைய ஆலயத்தின் புதிய பிரகாரத்தில் கூடியிருந்த யூதா, எருசலேம் சபையார் முன்னால் நின்று,  யோசபாத் ஜெபம் செய்தார். “யெகோவாவே, எங்கள் முன்னோர்களின் கடவுளே, பரலோகத்திலிருக்கிற கடவுள் நீங்கள் மட்டும்தானே?+ உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்கள்மீதும் உங்களுக்குத்தானே அதிகாரம் இருக்கிறது?+ உங்களுக்கு எவ்வளவு பலமும் சக்தியும் இருக்கிறது! யாராலும் உங்களை எதிர்த்துநிற்க முடியாது.+  எங்கள் கடவுளே, உங்கள் மக்களான இஸ்ரவேலர்களின் கண் முன்னால் இங்கே குடியிருந்தவர்களைத் துரத்தியடித்துவிட்டு, உங்கள் நண்பரான ஆபிரகாமின் சந்ததிக்கு+ இந்தத் தேசத்தை நிரந்தர சொத்தாகக் கொடுத்தீர்களே!  உங்களுடைய மக்களும் இங்கே குடியேறினார்கள், உங்களுடைய பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்டி+ உங்களிடம் ஜெபம் செய்தார்கள்.  ‘எங்களுக்குக் கஷ்டம் வரும்போது, போரினாலோ தண்டனையினாலோ கொடிய நோயினாலோ பஞ்சத்தினாலோ நாங்கள் தாக்கப்படும்போது, இந்த ஆலயத்துக்கு வந்து உங்கள் முன்னால் நின்று மன்றாடுவோம்; (ஏனென்றால், இந்த ஆலயம் உங்களுடைய பெயரைத் தாங்கியிருக்கிறது)+ கஷ்டத்தைப் போக்கச் சொல்லி நாங்கள் கெஞ்சும்போது, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டு உதவி செய்யுங்கள்’+ என்று வேண்டிக்கொண்டார்கள். 10  இப்போது பாருங்கள்! அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியில்+ வாழ்கிறவர்களும் எங்களுக்கு எதிராகப் படையெடுத்து வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலிருந்து வந்தபோது இவர்களுடைய தேசத்தைப் பிடிக்க வேண்டாமென்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள், அதனால் இஸ்ரவேலர்களும் இவர்களை அழிக்காமல் விலகிப் போனார்கள்.+ 11  ஆனால் கொஞ்சம்கூட நன்றியே இல்லாமல், நீங்கள் சொத்தாகக் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து எங்களைத் துரத்த இவர்கள் வந்திருக்கிறார்கள்.+ 12  எங்கள் கடவுளே, நீங்கள் அவர்களைத் தண்டிக்க மாட்டீர்களா?+ எங்களைத் தாக்க வந்திருக்கிற இந்தப் பெரிய படையை எதிர்க்க எங்களுக்குச் சக்தியில்லை, என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை.+ எங்களுடைய கண்கள் உங்களையே பார்த்துக்கொண்டிருக்கின்றன”+ என்று ஜெபம் செய்தார். 13  அந்தச் சமயத்தில், யூதாவைச் சேர்ந்த ஆட்கள் எல்லாரும் தங்களுடைய மனைவிகளோடும் பிள்ளைகளோடும் சின்னக் குழந்தைகளோடும் வந்து யெகோவா முன்னால் நின்றுகொண்டிருந்தார்கள். 14  அந்தச் சபையார் நடுவில் இருந்த யகாசியேல்மீது யெகோவாவின் சக்தி வந்தது. இவருடைய அப்பா பெயர் சகரியா, சகரியாவின் அப்பா பெயர் பெனாயா; பெனாயாவின் அப்பா பெயர் எயியேல், எயியேலின் அப்பா பெயர் மத்தனியா, இவர் ஆசாப்பின் வம்சத்தில் வந்த லேவியர். 15  அப்போது யகாசியேல் அங்கிருந்த மக்களிடம், “யூதா மக்களே, எருசலேம் மக்களே, யோசபாத் ராஜாவே, நீங்கள் எல்லாரும் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்தப் பெரிய படையைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள். ஏனென்றால், இது உங்களுடைய போர் அல்ல, கடவுளுடைய போர்.+ 16  நாளைக்கு அவர்களை எதிர்த்துப் போர் செய்யப் போங்கள். அவர்கள் சிஸ் கணவாய்* வழியாக வருவார்கள். யெருவேல் வனாந்தரத்துக்குப் பக்கத்தில் இருக்கிற பள்ளத்தாக்கின்* எல்லையில் அவர்களைச் சந்திப்பீர்கள். 17  ஆனால், நீங்கள் போர் செய்ய வேண்டியதில்லை. அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள்,+ யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்.+ யூதா மக்களே, எருசலேம் மக்களே, பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ நாளைக்கு அவர்களை எதிர்த்துப் போர் செய்யப் போங்கள். யெகோவா உங்களோடு இருப்பார்’”+ என்று சொன்னார். 18  உடனே, யோசபாத் யெகோவாவுக்கு முன்னால் மண்டிபோட்டு தரைவரைக்கும் குனிந்து வணங்கினார்; யூதா மக்கள் எல்லாரும் எருசலேமில் குடியிருந்தவர்களும் யெகோவாவுக்கு முன்னால் விழுந்து வணங்கினார்கள். 19  பின்பு கோகாத்,+ கோராகு ஆகியோரின் வம்சத்தில் வந்த லேவியர்கள் எழுந்து நின்று இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவைப் புகழ்ந்து மிகவும் சத்தமாகப் பாடினார்கள்.+ 20  அடுத்த நாள் விடியற்காலையிலேயே எழுந்து எல்லாரும் தெக்கோவா+ வனாந்தரத்துக்குப் போனார்கள். அவர்கள் புறப்பட்டபோது யோசபாத் எழுந்து நின்று, “யூதா மக்களே, எருசலேம் மக்களே, உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள். அப்போதுதான், உங்களால் உறுதியாக நிற்க* முடியும். அவருடைய தீர்க்கதரிசிகள் சொன்னதை நம்புங்கள்,+ உங்களுக்கு வெற்றி நிச்சயம்” என்றார். 21  மக்களிடம் கலந்துபேசிவிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவதற்குப் பாடகர்களை நியமித்தார்.+ பரிசுத்த உடையைப் போட்டுக்கொண்டு, போர்வீரர்களுக்கு முன்னால் நடந்துகொண்டே, “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று பாடுவதற்காக அவர்களை நியமித்தார். 22  அப்படி அவர்கள் சந்தோஷமாகப் புகழ்ந்து பாடியபோது, யூதா தேசத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்த அம்மோனியர்களையும் மோவாபியர்களையும் சேயீர் மலைப்பகுதியில் வாழ்கிறவர்களையும் பதுங்கித் தாக்குவதற்கு யெகோவா ஏற்பாடு செய்தார். எதிரிகள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்தார்கள்.+ 23  முதலில், அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பகுதியைச்+ சேர்ந்த வீரர்களை ஒழித்துக்கட்டினார்கள். அதன் பின்பு, அம்மோனியர்களும் மோவாபியர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொன்றார்கள்.+ 24  யூதா மக்கள் வனாந்தரத்திலிருந்த காவற்கோபுரத்துக்கு+ வந்து எதிரிகள் இருந்த திசையில் பார்த்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பது தெரிந்தது,+ ஒருவர்கூட உயிரோடு இல்லை. 25  செத்துக்கிடந்தவர்களிடம் இருந்த பொருள்களை எடுத்துக்கொண்டு போவதற்காக யோசபாத்தும் மக்களும் வந்தார்கள். அங்கே ஏகப்பட்ட பொருள்களும் துணிமணிகளும் நல்ல நல்ல சாமான்களும் இருப்பதைப் பார்த்தார்கள். இதற்குமேல் சுமக்க முடியாது என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட பொருள்களை எடுத்துக்கொண்டார்கள்.+ பொருள்கள் எக்கச்சக்கமாக இருந்ததால் அதையெல்லாம் அள்ளிக்கொண்டு போகவே மூன்று நாட்கள் ஆனது. 26  நான்காம் நாளில் அவர்கள் எல்லாரும் ஒரு பள்ளத்தாக்கில் கூடிவந்து, யெகோவாவைப் போற்றிப் புகழ்ந்தார்கள். அதனால், அந்தப் பள்ளத்தாக்குக்கு பெராக்கா*+ என்று பெயர் வைத்தார்கள். இன்றுவரை அது அந்தப் பெயரில்தான் அழைக்கப்படுகிறது. 27  பின்பு, யோசபாத்தின் தலைமையில் யூதா, எருசலேம் மக்கள் எல்லாரும் கொண்டாட்டத்தோடு எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். யெகோவா அவர்களுக்கு வெற்றி தேடித் தந்ததால் மிகவும் சந்தோஷப்பட்டார்கள்.+ 28  நரம்பிசைக் கருவிகள், யாழ்கள்,+ எக்காளங்கள்+ ஆகியவற்றை இசைத்துக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள். பின்பு, யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார்கள்.+ 29  இஸ்ரவேலர்களின் எதிரிகளோடு யெகோவா போர் செய்தார் என்பதை எல்லா ராஜ்யங்களும் கேள்விப்பட்டதால், அவரை நினைத்துப் பயந்து நடுங்கின.+ 30  அதனால், யோசபாத்தின் ஆட்சியில் அமைதி நிலவியது. சுற்றியிருந்த தேசங்களின் தொல்லையில்லாமல் நிம்மதியாக வாழ அவருடைய கடவுள் உதவி செய்தார்.+ 31  யூதா தேசத்தை யோசபாத் தொடர்ந்து ஆட்சி செய்தார். ராஜாவானபோது அவருக்கு 35 வயது; அவர் எருசலேமில் 25 வருஷங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அசுபாள், இவள் சில்கியின் மகள்.+ 32  யோசபாத் தன்னுடைய அப்பாவான ஆசாவின் வழியில் நடந்துவந்தார்,+ அதைவிட்டு விலகவில்லை; யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்துவந்தார்.+ 33  இருந்தாலும், ஆராதனை மேடுகள் அழிக்கப்படவில்லை;+ தங்கள் முன்னோர்களின் கடவுளைத் தேடுவதற்கு மக்கள் தங்களுடைய இதயத்தைத் தயார்படுத்தவில்லை.+ 34  ஆரம்பம்முதல் முடிவுவரை யோசபாத்தின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் அனானியின்+ மகனான யெகூவின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.+ அந்த விஷயங்கள் எல்லாம் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்திலும் எழுதப்பட்டிருக்கிறது. 35  இதற்கு பின்பு, மோசமான காரியத்தைச் செய்த இஸ்ரவேலின் ராஜாவான அகசியாவுடன்+ யூதாவின் ராஜாவான யோசபாத் கூட்டுச் சேர்ந்துகொண்டார். 36  தர்ஷீசுக்குப்+ போவதற்காக இவர்கள் இரண்டு பேரும் கூட்டுச் சேர்ந்து எசியோன்-கேபேரில்+ கப்பல்களைக் கட்டினார்கள். 37  ஆனால், யோசபாத்துக்கு எதிராக மரேசாவைச் சேர்ந்த தொதாவாவு என்பவரின் மகனான எலியேசர் தீர்க்கதரிசனம் சொன்னார். அவர் யோசபாத்திடம், “அகசியாவுடன் கூட்டுச் சேர்ந்துகொண்டதால் நீங்கள் செய்த எல்லாவற்றையும் யெகோவா அழித்துவிடுவார்”+ என்று சொன்னார். அதன்படியே, அவருடைய கப்பல்கள் சேதமடைந்தன,+ அதனால் அவை தர்ஷீசுக்குப் போக முடியவில்லை.

அடிக்குறிப்புகள்

அல்லது, “மெயூனீம்கள்.”
அநேகமாக, சவக் கடல்.
கணவாய் என்பது இரண்டு மலைகளுக்கு இடையில் இயற்கையாக அமைந்துள்ள பாதை.
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கின்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “உங்களால் சகித்திருக்க.”
அர்த்தம், “புகழ்வது.”