2 நாளாகமம் 21:1-20

  • யோராம் யூதாவின் ராஜாவாகிறார் (1-11)

  • எலியாவின் கடிதம் (12-15)

  • யோராமுக்கு வந்த பயங்கரமான முடிவு (16-20)

21  யோசபாத் இறந்த* பின்பு, அவருடைய முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அதாவது ‘தாவீதின் நகரத்தில்,’ அடக்கம் செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் யோராம் ராஜாவானார்.+  அசரியா, யெகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா ஆகியோர் யோராமின் தம்பிகள். இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவான யோசபாத்தின் மகன்கள்.  நிறைய தங்கத்தையும் வெள்ளியையும் விலைமதிப்புள்ள பொருள்களையும் யூதா தேசத்தில் இருந்த மதில் சூழ்ந்த நகரங்களையும் அவர்களுடைய அப்பா அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.+ ஆனால், யோராம் மூத்த மகனாக இருந்ததால், அவருக்கு ராஜ்யத்தையே கொடுத்தார்.+  ஆட்சி யோராமின் கைக்கு வந்ததும், அதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தன்னுடைய தம்பிகள் எல்லாரையும் வாளால் வெட்டிக் கொன்றார்.+ இஸ்ரவேலில் இருந்த அதிகாரிகள் சிலரையும் கொன்றுபோட்டார்.  ராஜாவானபோது யோராமுக்கு 32 வயது; அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+  ஆகாபின் மகளை அவர் கல்யாணம் செய்ததால்,+ இஸ்ரவேல் ராஜாக்களைப் போலவே மோசமான வழியில் நடந்தார்,+ ஆகாபின் வீட்டார் செய்த கெட்ட காரியங்களை இவரும் செய்தார். யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்.  ஆனாலும், தாவீதின் வம்சத்தை அழிக்க யெகோவா விரும்பவில்லை. ஏனென்றால், தாவீதுடன் அவர் ஒப்பந்தம் செய்து,+ எருசலேமில் தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் என்றென்றும் ஒரு விளக்கை* கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார்.+  யோராமின் ஆட்சிக் காலத்தில், யூதாவை எதிர்த்து ஏதோமியர்கள் கலகம் செய்து,+ தங்களுக்கென்று ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.+  அதனால், யோராம் தன்னுடைய படைத் தலைவர்களோடும், தன்னுடைய எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனார். ராத்திரியில் எழுந்து போய், தன்னையும் ரதத் தலைவர்களையும் சுற்றிவளைத்திருந்த ஏதோமியர்களைத் தோற்கடித்தார். 10  ஆனாலும், இன்றுவரை யூதாவை எதிர்த்து ஏதோம் கலகம் செய்துகொண்டுதான் இருக்கிறது. அந்தச் சமயத்தில் லிப்னாவும்+ அவருக்கு எதிராகக் கலகம் செய்தது. யோராம் தன்னுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவைவிட்டு விலகியதால்தான் இதெல்லாம் நடந்தது.+ 11  யூதாவிலுள்ள மலைகளில் அவர் ஆராதனை மேடுகளைக் கட்டினார்.+ இப்படி, எருசலேம் மக்கள் கடவுளுக்குத் துரோகம் செய்வதற்கும் யூதா மக்கள் கடவுளைவிட்டு விலகுவதற்கும் அவர் காரணமாக இருந்தார். 12  பிற்பாடு, எலியா+ தீர்க்கதரிசியிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், “உன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளாகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘உன்னுடைய அப்பா யோசபாத்தையும்+ யூதாவின் ராஜா ஆசாவையும் போல் நீ நல்ல வழியில் நடக்கவில்லை.+ 13  அதற்குப் பதிலாக, இஸ்ரவேல் ராஜாக்களின் வழியில் நடந்தாய்,+ ஆகாபின் வீட்டார் செய்ததுபோல்+ யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் கடவுளுக்குத் துரோகம் செய்ய வைத்தாய்.+ இது போதாதென்று, உன்னைவிட நல்லவர்களாக இருந்த உன் அப்பாவின் பிள்ளைகளைக் கொன்றுபோட்டாய்,+ சொந்தத் தம்பிகள் என்றுகூட பார்க்கவில்லை. 14  அதனால், யெகோவா உன்னுடைய மக்களுக்கும், உன் மகன்களுக்கும், மனைவிகளுக்கும் மிகப் பெரிய தண்டனை கொடுக்கப்போகிறார், உன் சொத்துகளையெல்லாம் பறித்துவிடுவார். 15  உனக்கு ஏகப்பட்ட நோய்கள் வரும். உன் குடலிலும் ஒரு நோய் வரும். அந்த நோய் நாளுக்கு நாள் மோசமாகி, கடைசியில் உன்னுடைய குடல் வெளியே வந்துவிடும்’” என்று எழுதியிருந்தார். 16  பின்பு, யோராமை எதிர்த்துப் போர் செய்வதற்காக பெலிஸ்தியர்களையும்,+ எத்தியோப்பியர்களுக்குப் பக்கத்தில் இருந்த அரேபியர்களையும்+ யெகோவா தூண்டினார்.+ 17  அதனால் அவர்கள் யூதா தேசத்தின்மேல் படையெடுத்து வந்து, அதைத் தாக்கினார்கள்; அரண்மனையில் இருந்த எல்லா பொருள்களையும் கொள்ளையடித்தார்கள்.+ அதோடு, ராஜாவின் மகன்களையும் மனைவிகளையும் பிடித்துக்கொண்டு போனார்கள். அவருடைய கடைசி மகன் யோவாகாசை*+ மட்டும் அவரிடம் விட்டுவிட்டார்கள். 18  இதற்குப் பிறகு, யெகோவா அவரைத் தண்டித்ததால், யோராமின் குடலில் தீராத நோய் வந்தது.+ 19  சில காலத்துக்குப் பின்பு, அதாவது இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, அந்த நோயால் அவருடைய குடல்கள் வெளியே வந்தன. அவர் கடைசிவரை பயங்கரமாகக் கஷ்டப்பட்டு இறந்துபோனார். வாசனைப் பொருள்களை எரித்து அவருடைய முன்னோர்களை அடக்கம் செய்ததுபோல், யோராமை அவருடைய மக்கள் அடக்கம் செய்யவில்லை.+ 20  ராஜாவானபோது அவருக்கு 32 வயது. அவர் எட்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவர் இறந்துபோனதற்காக யாருமே வருத்தப்படவில்லை. அவரை ‘தாவீதின் நகரத்தில்’+ அடக்கம் செய்தார்கள். ஆனால், ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடக்கம் செய்யவில்லை.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்ட.”
அதாவது, “வாரிசை.”
அகசியா என்றும் அழைக்கப்படுகிறார்.