2 நாளாகமம் 30:1-27
-
எசேக்கியா பஸ்காவை அனுசரிக்கிறார் (1-27)
30 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகை+ கொண்டாடுவதற்காக, எருசலேமில் இருக்கிற யெகோவாவின் ஆலயத்துக்கு வரச் சொல்லி இஸ்ரவேலிலும் யூதாவிலும் இருக்கிற எல்லா மக்களுக்கும் எசேக்கியா தகவல் அனுப்பினார்.+ எப்பிராயீம், மனாசே+ கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கடிதங்கள்கூட அனுப்பினார்.
2 பஸ்கா பண்டிகையை இரண்டாம் மாதத்தில் கொண்டாடலாம்+ என்று ராஜாவும் அதிகாரிகளும் எருசலேமில் இருந்த சபையார் எல்லாரும் தீர்மானம் எடுத்தார்கள்.
3 ஏனென்றால், இன்னும் நிறைய குருமார்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொள்ளவில்லை.+ மக்களும் எருசலேமில் கூடிவரவில்லை. அதனால், வழக்கம்போல் முதலாம் மாதத்தில் பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை.+
4 இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதுதான் சரியாக இருக்கும் என்று ராஜாவும் சபையார் எல்லாரும் நினைத்தார்கள்.
5 அதனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்கு வரச் சொல்லி இஸ்ரவேல் முழுவதுக்கும், அதாவது தாண்முதல்+ பெயெர்-செபாவரை குடியிருக்கிற எல்லாருக்கும், அறிவிக்க வேண்டுமென்று தீர்மானம் எடுத்தார்கள். ஏனென்றால், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டபடி அவர்கள் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து அதுவரை பஸ்காவைக் கொண்டாடவில்லை.+
6 ராஜாவும் அதிகாரிகளும் கொடுத்த கடிதங்களை எடுத்துக்கொண்டு இஸ்ரவேல் முழுவதும் யூதா முழுவதும் தூதுவர்கள் போனார்கள். ராஜா கட்டளையிட்டபடி மக்களிடம் போய், “இஸ்ரவேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் ஆகியோரின் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வாருங்கள். அப்போதுதான், அசீரிய ராஜாக்களின்+ கையிலிருந்து தப்பித்து மீதியாயிருக்கும் உங்களிடம் அவர் திரும்பி வருவார்.
7 தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்கு உண்மையாக இல்லாத உங்களுடைய முன்னோர்களையும் சகோதரர்களையும் போல் இருக்காதீர்கள். உண்மையாக இல்லாததால்தான் கடவுள் அவர்களை அழித்தார். அதை நீங்களே கண்கூடாகப் பார்க்கிறீர்கள்.+
8 உங்கள் முன்னோர்களைப் போல நீங்கள் பிடிவாதமாக இருக்காதீர்கள்.+ யெகோவாவுக்கு அடிபணிந்து நடங்கள். உங்களுடைய கடவுளான யெகோவா நிரந்தரமாகப் புனிதப்படுத்திய ஆலயத்துக்கு வந்து,+ அவருக்குச் சேவை செய்யுங்கள். அப்போதுதான், உங்கள்மீது அவருக்கு இருக்கிற கடும் கோபம் குறையும்.+
9 நீங்கள் யெகோவாவிடம் திரும்பி வந்தால், உங்களுடைய சகோதரர்களையும் மகன்களையும் பிடித்துக்கொண்டு போனவர்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்கள்,+ அவர்களை மறுபடியும் இந்தத் தேசத்துக்கே திருப்பி அனுப்புவார்கள்.+ உங்கள் கடவுளான யெகோவா கரிசனையுள்ளவர்,* இரக்கமுள்ளவர்.+ நீங்கள் அவரிடம் திரும்பி வந்தால் அவர் முகத்தைத் திருப்பிக்கொள்ள மாட்டார்”+ என்று சொன்னார்கள்.
10 எப்பிராயீம், மனாசே+ பகுதிகளில் இருந்த ஒவ்வொரு நகரத்துக்கும் அந்தத் தூதுவர்கள் போனார்கள், செபுலோனுக்கும்கூட போனார்கள். ஆனால், மக்கள் அவர்களைப் பார்த்து கேலி கிண்டல் செய்தார்கள்.+
11 இருந்தாலும் ஆசேரையும் மனாசேயையும் செபுலோனையும் சேர்ந்த சிலர் தங்களைத் தாழ்த்திக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள்.+
12 யூதா மக்கள்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது. அவருடைய வார்த்தையின்படி ராஜாவும் அதிகாரிகளும் கொடுத்த கட்டளைக்கு ஒருமனதாகக் கீழ்ப்படிய அந்த மக்களுக்கு அவர் உதவி செய்தார்.
13 இரண்டாம் மாதத்தில்,+ புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகைக்காக+ எருசலேமுக்கு மக்கள் திரண்டு வந்தார்கள். அங்கே பெரிய கூட்டமாகக் கூடி வந்தார்கள்.
14 பொய் தெய்வங்களுக்காக எருசலேமில் கட்டப்பட்ட பலிபீடங்கள்,+ தூபபீடங்கள் எல்லாவற்றையும் பெயர்த்தெடுத்து+ கீதரோன் பள்ளத்தாக்கில் வீசினார்கள்.
15 இரண்டாம் மாதம் 14-ஆம் நாளில், பஸ்கா பலியை வெட்டினார்கள். அதையெல்லாம் பார்த்தபோது குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் அவமானமாக இருந்தது. அதனால், அவர்கள் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குத் தகன பலிகளைக் கொண்டுவந்தார்கள்.
16 உண்மைக் கடவுளின் ஊழியரான மோசேயின் திருச்சட்டத்தின்படி, அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்றார்கள். லேவியர்களிடமிருந்து பலிகளின் இரத்தத்தை வாங்கி குருமார்கள் பலிபீடத்தில் தெளித்தார்கள்.+
17 சபையாரில் நிறைய பேர் தங்களைப் புனிதப்படுத்தாமல் வந்திருந்தார்கள். சுத்தமாக இல்லாத ஒவ்வொருவருடைய நன்மைக்காகவும் பஸ்கா ஆட்டுக்குட்டிகளை வெட்டுகிற பொறுப்பு லேவியர்களுக்கு இருந்தது.+ யெகோவாவுக்கு அவர்களைப் புனிதப்படுத்துவதற்காக லேவியர்கள் இதைச் செய்தார்கள்.
18 ஏராளமான மக்கள், முக்கியமாக எப்பிராயீம், மனாசே,+ இசக்கார், செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்த மக்கள், தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளாமல் வந்திருந்தார்கள்; அப்படியிருந்தும், கடவுள் கொடுத்த சட்டத்தை மீறி பஸ்கா உணவைச் சாப்பிட்டார்கள். அதனால் எசேக்கியா அவர்களுக்காக ஜெபம் செய்தார். “யெகோவாவே, நீங்கள் நல்லவர்.+
19 முன்னோர்களின் கடவுளான யெகோவாவே, உண்மைக் கடவுளே, உங்களைத் தேடுவதற்காகத்+ தங்கள் இதயத்தைத் தயார்படுத்தியிருக்கிற ஒவ்வொருவரையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய சட்டத்தின்படி தங்களைச் சுத்தப்படுத்திக்கொள்ளாதவர்களைத்+ தயவுசெய்து மன்னித்துவிடுங்கள்” என்று கெஞ்சினார்.
20 எசேக்கியா செய்த ஜெபத்தைக் கேட்டு, யெகோவா அவர்களை மன்னித்தார்.*
21 அதனால், எருசலேமுக்கு வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையைச்+ சந்தோஷம் பொங்க ஏழு நாட்கள் கொண்டாடினார்கள்.+ லேவியர்களும் குருமார்களும் தினமும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள், யெகோவாவைப் புகழ்வதற்காக இசைக் கருவிகளைச் சத்தமாக வாசித்தார்கள்.+
22 யெகோவாவுக்கு விவேகமாகச் சேவை செய்த லேவியர்கள் எல்லாரையும் எசேக்கியா ஊக்கப்படுத்தினார். பண்டிகை நடந்த ஏழு நாட்களும் அவர்கள் விருந்து சாப்பிட்டார்கள்;+ சமாதான பலிகளைக் கொடுத்து,+ முன்னோர்களின் கடவுளான யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.
23 பின்பு, சபையார் எல்லாரும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பண்டிகை கொண்டாடத் தீர்மானித்தார்கள். அதனால், அடுத்த ஏழு நாட்களும் சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.+
24 எசேக்கியா ராஜா 1,000 காளைகளையும் 7,000 செம்மறியாடுகளையும் சபையாருக்கு நன்கொடையாகக் கொடுத்தார். அதிகாரிகளும் 1,000 காளைகளையும் 10,000 செம்மறியாடுகளையும் கொடுத்தார்கள்.+ குருமார்கள் பலர் தங்களைப் புனிதப்படுத்திக்கொண்டார்கள்.+
25 யூதா சபையார் எல்லாரும் குருமார்களும் லேவியர்களும் இஸ்ரவேலில் இருந்து வந்திருந்த சபையார் எல்லாரும்,+ இஸ்ரவேலிலும் யூதாவிலும் குடியிருந்த மற்ற தேசத்து மக்களும்+ சந்தோஷமாகக் கொண்டாடினார்கள்.
26 எல்லாரும் எருசலேமில் மிகவும் சந்தோஷமாகப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் மகன் சாலொமோன் காலத்திலிருந்து அதுவரை எருசலேமில் இதுபோல் நடந்ததே இல்லை.+
27 கடைசியாக, லேவி வம்சத்தைச் சேர்ந்த குருமார்கள் எழுந்து மக்களை ஆசீர்வதித்தார்கள்.+ அவர்கள் செய்த ஜெபத்தைக் கடவுள் கேட்டார், அது கடவுள் குடியிருக்கிற பரிசுத்த இடமான பரலோகத்தை எட்டியது.