2 நாளாகமம் 33:1-25

  • மனாசே யூதாவின் ராஜாவாகிறார் (1-9)

  • மனாசே திருந்துகிறார் (10-17)

  • மனாசே இறந்துபோகிறார் (18-20)

  • ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (21-25)

33  மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+  யெகோவா வெறுக்கிற காரியங்களை மனாசே செய்தார்; இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்.+  தன்னுடைய அப்பாவான எசேக்கியா இடித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத் திரும்பக் கட்டினார்;+ பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, பூஜைக் கம்பங்களை* நிறுத்தினார். வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+  அதோடு, யெகோவாவின் ஆலயத்திலேயே, “எருசலேமில் என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்”+ என்று யெகோவா சொல்லியிருந்த ஆலயத்திலேயே, பலிபீடங்களைக் கட்டினார்.+  வானத்துப் படைகளை வணங்குவதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் பலிபீடங்களைக் கட்டினார்.+  பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்,*+ சொந்த மகன்களையே நெருப்பில் பலி கொடுத்தார்.*+ மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார்,+ குறிசொன்னார், பில்லிசூனியம் செய்தார், ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.  மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை உண்மைக் கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் கடவுள் இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும் இந்த ஆலயத்திலும் என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+  இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும், அதாவது மோசே மூலம் நான் கொடுத்த திருச்சட்டம் முழுவதையும் விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும், அப்படியே அவர்கள் பின்பற்றி நடந்தால் அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலிருந்து இனி ஒருபோதும் அவர்களைத் துரத்திவிட மாட்டேன்.”  இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுமோசமான காரியங்களைச் செய்ய யூதா மக்களையும் எருசலேம் மக்களையும் மனாசே தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+ 10  மனாசேக்கும் அவருடைய மக்களுக்கும் யெகோவா அறிவுரை சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால், அவர்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.+ 11  அதனால், அவர்களுக்கு எதிராக அசீரிய ராஜாவின் படைத் தலைவர்களை யெகோவா அனுப்பினார். அவர்கள் மனாசேயைப் பிடித்து கொக்கிகள் மாட்டி,* இரண்டு செம்பு விலங்குகள் போட்டு பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 12  அவர் இக்கட்டில் தவித்தபோது, கருணை காட்டச் சொல்லி யெகோவா தேவனிடம் கெஞ்சினார். தன்னுடைய முன்னோர்களின் கடவுள் முன்னால் மிகவும் தாழ்மையோடு நடந்துகொண்டார். 13  கடவுளிடம் ஜெபம் செய்துகொண்டே இருந்தார். அவர் கெஞ்சுவதைப் பார்த்து கடவுள் இரக்கப்பட்டார், கருணை காட்டச் சொல்லி அவர் மன்றாடியபோது அதைக் கேட்டார். அதனால், அவரை மறுபடியும் எருசலேமின் ராஜாவாக்கினார்.+ யெகோவாதான் உண்மையான கடவுள் என்பதை மனாசே அப்போது புரிந்துகொண்டார்.+ 14  இதற்குப் பின்பு, அவர் ‘தாவீதின் நகரத்துக்கு’+ வெளியே மதிலைக் கட்டினார்; பள்ளத்தாக்கில்* இருக்கிற கீகோனுக்கு மேற்கே+ ‘மீன் நுழைவாசல்’+ வரை கட்டினார், அங்கிருந்து அந்த நகரத்தைச் சுற்றி ஓபேல் வரை அதைக் கட்டினார்;+ அந்த மதிலை மிக உயரமாகக் கட்டினார். அதோடு, யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றிலும் படைத் தலைவர்களை நியமித்தார். 15  பின்பு, பொய் தெய்வங்களின் சிலைகளையும் அந்த உருவச் சிலையையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்துப்போட்டார்.+ யெகோவாவின் ஆலயம் இருந்த மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லா பலிபீடங்களையும் இடித்து,+ அவற்றை நகரத்துக்கு வெளியே வீசினார். 16  அதோடு, யெகோவாவின் பலிபீடத்தைப் பழுதுபார்த்து,+ சமாதான பலிகளையும் நன்றிப் பலிகளையும்+ கொடுக்க ஆரம்பித்தார்;+ இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை வணங்கச் சொல்லி யூதா மக்களை ஊக்கப்படுத்தினார். 17  மக்கள் இன்னும் ஆராதனை மேடுகளில்தான் பலி கொடுத்து வந்தார்கள். ஆனால், தங்கள் கடவுளான யெகோவாவுக்கு மட்டும்தான் பலி கொடுத்து வந்தார்கள். 18  மனாசேயின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களும், கடவுளிடம் அவர் செய்த ஜெபமும், இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவின் பெயரில் பேசிய தரிசனக்காரர்கள் அவரிடம் சொன்ன விஷயங்களும் இஸ்ரவேல் ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. 19  அதோடு, தரிசனக்காரர்கள் அவரைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள். அதாவது, அவர் செய்த ஜெபத்தைப்+ பற்றியும் அவருடைய மன்றாட்டுக்குப் பதில் கிடைத்ததைப் பற்றியும் அவர் செய்த எல்லா பாவங்களைப் பற்றியும் கடவுளுக்கு உண்மையாக நடந்துகொள்ளாததைப் பற்றியும் எழுதி வைத்திருக்கிறார்கள்.+ அதோடு, மனம் திருந்துவதற்கு முன்பு எங்கெல்லாம் ஆராதனை மேடுகளைக் கட்டினார் என்பதைப் பற்றியும் எங்கெல்லாம் பூஜைக் கம்பங்களையும்*+ உருவச் சிலைகளையும் நிறுத்தினார் என்பதைப் பற்றியும் எழுதி வைத்திருக்கிறார்கள். 20  மனாசே இறந்துபோனதும்,* அவருடைய அரண்மனைக்குப் பக்கத்தில் அவரை அடக்கம் செய்தார்கள். அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார்.+ 21  ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ 22  ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ தன்னுடைய அப்பா மனாசே செய்து வைத்திருந்த எல்லா உருவச் சிலைகளுக்கும் பலி கொடுத்து,+ அவற்றை வழிபட்டுவந்தார். 23  அவருடைய அப்பா மனாசே மனம் திருந்தி யெகோவா முன்னால் தாழ்மையாக நடந்துகொண்டதுபோல்+ ஆமோன் நடந்துகொள்ளவில்லை.+ பாவத்துக்குமேல் பாவம் செய்துகொண்டே போனார். 24  கடைசியில், அவருடைய ஊழியர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி,+ அவருடைய அரண்மனையிலேயே அவரைக் கொலை செய்தார்கள். 25  ஆமோன் ராஜாவைக் கொன்ற அந்தச் சதிகாரர்கள் எல்லாரையும் பொதுமக்கள் வெட்டிக் கொன்றார்கள்.+ பின்பு, அவருடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினார்கள்.+

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்.”
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அர்த்தம், “இன்னோம் மகனின்.”
அல்லது, “பாறையிலிருந்த இடுக்கில் ஒளிந்துகொண்டிருந்த மனாசேயைப் பிடித்து.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கில்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டதும்.”