2 நாளாகமம் 4:1-22

  • பலிபீடம், ‘செம்புக் கடல்,’ தொட்டிகள் (1-6)

  • குத்துவிளக்குகள், மேஜைகள், பிரகாரங்கள் (7-11அ)

  • ஆலயத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடிக்கிறார்கள் (11ஆ-22)

4  பின்பு, செம்புப் பலிபீடத்தைச் செய்தார்;+ அதன் நீளம் 20 முழம், அகலம் 20 முழம், உயரம் 10 முழம்.  ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை+ உலோகத்தால் அவர் வார்த்தார். அது வட்ட வடிவில் இருந்தது. அந்தத் தொட்டியின் ஒரு விளிம்புமுதல் மறு விளிம்புவரை அதன் விட்டம் 10 முழம்; அதன் உயரம் 5 முழம். அளவுநூலால் அளந்தபோது அதன் சுற்றளவு 30 முழமாக இருந்தது.+  அந்த விளிம்புக்குக் கீழே சுற்றிலும் குமிழ் வடிவத்தில் வேலைப்பாடுகள் இருந்தன.+ ஒரு முழத்துக்குப் பத்துக் குமிழ்கள் எனத் தொட்டியைச் சுற்றிலும் இருந்தன. அந்தக் குமிழ்கள் இரண்டு வரிசையாக இருந்தன, செம்புத் தொட்டியோடு சேர்த்து வார்க்கப்பட்டிருந்தன.  அந்தத் தொட்டி 12 காளை உருவங்களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.+ மூன்று காளைகள் வடக்கேயும் மூன்று காளைகள் மேற்கேயும் மூன்று காளைகள் தெற்கேயும் மூன்று காளைகள் கிழக்கேயும் பார்த்தவாறு நின்றன. அந்தக் காளைகள்மேல் தொட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்தக் காளைகளின் பின்புறங்கள் தொட்டியின் மையப்பகுதியை நோக்கி இருந்தன.  அந்தத் தொட்டியின் தடிமன் ஒரு கையளவு.* அதன் விளிம்பு கிண்ணத்தின் விளிம்பைப் போல் இருந்தது. பார்ப்பதற்கு மலர்ந்த லில்லிப் பூவைப் போல் இருந்தது. அந்தத் தொட்டியின் கொள்ளளவு சுமார் 66,000 லிட்டர்.*  அதோடு, தகன பலிக்குரிய எல்லாவற்றையும் கழுவுவதற்காக 10 தொட்டிகளை அவர் செய்தார்;+ ஆலயத்தின் வலது பக்கத்தில் ஐந்து தொட்டிகளையும் இடது பக்கத்தில் ஐந்து தொட்டிகளையும் வைத்தார்.+ ‘செம்புக் கடல்’ தொட்டியோ, குருமார்கள் தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவுவதற்காகச் செய்யப்பட்டது.+  பின்பு, கொடுக்கப்பட்ட அளவின்படி+ தங்கத்தில் 10 குத்துவிளக்குகளைச் செய்து+ அவற்றை ஆலயத்தில் வைத்தார். வலது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் இடது பக்கத்தில் ஐந்து குத்துவிளக்குகளையும் வைத்தார்.+  அதோடு, 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தார். வலது பக்கத்தில் ஐந்து மேஜைகளையும் இடது பக்கத்தில் ஐந்து மேஜைகளையும் வைத்தார்.+ தங்கத்தில் 100 கிண்ணங்களைச் செய்தார்.  பின்பு, குருமார்களுக்கான பிரகாரத்தையும்+ பெரிய பிரகாரத்தையும் கட்டினார்;+ அந்தப் பிரகாரங்களுக்குக் கதவுகளைச் செய்து, அவற்றின் மீது செம்புத் தகடு அடித்தார். 10  ஆலயத்தின் வலது பக்கத்தில், தென்கிழக்கு திசையில், ‘செம்புக் கடல்’ என்றழைக்கப்பட்ட பெரிய தண்ணீர்த் தொட்டியை வைத்தார்.+ 11  சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், கிண்ணங்கள் ஆகியவற்றையும் ஈராம் செய்தார்.+ உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக சாலொமோன் ராஜா செய்யச் சொல்லியிருந்த வேலைகளை ஈராம் செய்து முடித்தார்.+ 12  இரண்டு தூண்கள்,+ அவற்றின் உச்சியில் இருந்த கிண்ண வடிவ கும்பங்கள், இரண்டு கும்பங்களையும் அலங்கரித்த இரண்டு வலைப்பின்னல்கள்,+ 13  அந்த இரண்டு வலைப்பின்னல்களிலும் தொங்கவிட 400 மாதுளம்பழ வடிவங்கள் ஆகியவற்றைச் செய்தார்;+ ஒவ்வொரு வலைப்பின்னலிலும் இரண்டு வரிசை மாதுளம்பழ வடிவங்கள் இருந்தன. தூண்களின் உச்சியிலிருந்த இரண்டு கும்பங்களைச் சுற்றிலும் இந்த வலைப்பின்னல்கள் அமைக்கப்பட்டிருந்தன.+ 14  அதோடு, பத்துத் தள்ளுவண்டிகள்,* அவற்றில் வைக்க பத்துத் தொட்டிகள்,+ 15  ‘செம்புக் கடல்’ தொட்டி, அதன் கீழிருந்த 12 காளை உருவங்கள்,+ 16  சட்டிகள், சாம்பல் அள்ளும் கரண்டிகள், முள்கரண்டிகள்,+ மற்ற பாத்திரங்கள் ஆகியவற்றையும் செய்தார். இவை எல்லாவற்றையும் பளபளப்பான செம்பினால் செய்தார். சாலொமோன் ராஜா சொன்னபடியே யெகோவாவின் ஆலயத்துக்காக இவை எல்லாவற்றையும் ஈராம்-அபி*+ செய்தார். 17  யோர்தான் பிரதேசத்தில், சுக்கோத்துக்கும்+ சேரேதாவுக்கும் இடையிலுள்ள பகுதியில், இவற்றைக் களிமண் அச்சுகளில் ராஜா வார்த்தார். 18  இந்தச் சாமான்களையெல்லாம் சாலொமோன் மிக ஏராளமாகச் செய்தார்; இவற்றுக்காகப் பயன்படுத்திய செம்பை எடை போடவில்லை.+ 19  உண்மைக் கடவுளின் ஆலயத்துக்காக இந்தச் சாமான்கள் எல்லாவற்றையும் சாலொமோன் செய்தார்:+ தங்கப் பீடம்,+ படையல் ரொட்டிகளை வைக்க மேஜைகள்+ ஆகியவற்றைச் செய்தார்; 20  மகா பரிசுத்த அறைக்கு முன்னால் எரிந்துகொண்டிருப்பதற்காக விளக்குத்தண்டுகளையும் அவற்றின் அகல் விளக்குகளையும் சுத்தமான தங்கத்தில் செய்தார்.+ இவை எல்லாவற்றையும் முறைப்படி செய்தார். 21  அதற்கான மலர்கள், அகல் விளக்குகள், இடுக்கிகள் ஆகியவற்றைத் தங்கத்தில், அதுவும் சொக்கத்தங்கத்தில் செய்தார். 22  திரி வெட்டும் கருவிகள், கிண்ணங்கள், கோப்பைகள், தணல் அள்ளும் கரண்டிகள் ஆகியவற்றைச் சுத்தமான தங்கத்தில் செய்தார். ஆலயத்தின் நுழைவாசல், மகா பரிசுத்த அறையின் உட்புற கதவுகள்,+ ஆலயத்தின்* கதவுகள் ஆகியவற்றையும் தங்கத்தில் செய்தார்.+

அடிக்குறிப்புகள்

சுமார் 7.4 செ.மீ. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
மூலமொழியில், “3,000 பாத்.” ஒரு பாத் என்பது 22 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
வே.வா., “தண்ணீர் வண்டிகள்.”
நே.மொ., “ஈராம்-அபிவ்.” இது மற்றொரு உச்சரிப்பு.
இந்த வசனத்தில், இது பரிசுத்த அறையைக் குறிக்கிறது.