2 நாளாகமம் 5:1-14

  • ஆலய அர்ப்பணிப்புக்கான ஏற்பாடுகள் (1-14)

    • கடவுளின் பெட்டி ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிறது (2-10)

5  யெகோவாவின் ஆலயத்துக்காகச் செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் சாலொமோன் செய்து முடித்தார்.+ பின்பு, கடவுளுக்காகத் தன்னுடைய அப்பா தாவீது அர்ப்பணித்திருந்த* பொருள்களை ஆலயத்துக்குக் கொண்டுவந்தார்.+ தங்கத்தையும் வெள்ளியையும் மற்ற எல்லா பொருள்களையும் உண்மைக் கடவுளின் ஆலயத்திலிருந்த பொக்கிஷ அறைகளில் வைத்தார்.+  அந்தச் சமயத்தில், இஸ்ரவேல் பெரியோர்களை,* அதாவது எல்லா கோத்திரத் தலைவர்களையும் இஸ்ரவேலில் உள்ள தந்தைவழிக் குடும்பத் தலைவர்களையும், சாலொமோன் ஒன்றுகூடி வரச் சொன்னார்; ‘தாவீதின் நகரத்திலிருந்து,’ அதாவது சீயோனிலிருந்து, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள்.+  ஏழாம் மாதத்தில் நடக்கிற பண்டிகையின்போது* இஸ்ரவேல் ஆண்கள் எல்லாரும் ராஜா முன்னால் ஒன்றுகூடினார்கள்.+  இஸ்ரவேல் பெரியோர்கள் எல்லாரும் வந்தபோது, கடவுளுடைய பெட்டியை லேவியர்கள் தூக்கினார்கள்.+  பெட்டி, சந்திப்புக் கூடாரம்,+ அதிலிருந்த பரிசுத்த பொருள்கள் ஆகிய எல்லாவற்றையும் குருமார்களும் லேவியர்களும்* சுமந்துகொண்டு போனார்கள்.  சாலொமோன் ராஜாவும் அவரால் அழைக்கப்பட்ட இஸ்ரவேலர்கள் எல்லாரும் கடவுளின் பெட்டிக்கு முன்னால் கூடியிருந்தார்கள். அப்போது, எண்ண முடியாதளவுக்கு ஏராளமான ஆடுமாடுகளைப் பலி கொடுத்தார்கள்.+  பின்பு, குருமார்கள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியைக் கொண்டுவந்து அதற்குரிய இடத்தில் வைத்தார்கள்; அதாவது, ஆலயத்தின் உட்புறத்தில் இருந்த மகா பரிசுத்த அறையில் கேருபீன்களுடைய சிறகுகளின்கீழ் வைத்தார்கள்.+  பெட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தின் மேல் கேருபீன்கள் சிறகுகளை விரித்தபடி இருந்தன; அதனால், அவற்றின் நிழல் அந்தப் பெட்டியின் மீதும் அதன் கம்புகளின்+ மீதும் விழுந்தது.  அந்தக் கம்புகள் நீளமாக இருந்ததால், மகா பரிசுத்த அறைக்கு முன்னால் இருந்த பரிசுத்த அறையிலிருந்து அவற்றின் முனைகளைப் பார்க்க முடிந்தது, ஆனால் வெளியிலிருந்து அவற்றைப் பார்க்க முடியாது. இந்நாள்வரை அவை அங்கேதான் இருக்கின்றன. 10  மோசே ஓரேபில் இருந்தபோது வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறெதுவும் அந்தப் பெட்டியில் இருக்கவில்லை.+ எகிப்திலிருந்து வந்த இஸ்ரவேலர்களோடு ஓரேபில் யெகோவா ஒப்பந்தம்+ செய்த சமயத்தில்+ இந்தக் கற்பலகைகள் அதில் வைக்கப்பட்டன. 11  பரிசுத்த இடத்திலிருந்து குருமார்கள் வெளியே வந்தபோது (அங்கே வந்திருந்த குருமார்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாரும் தங்களைப் புனிதப்படுத்தியிருந்தார்கள்),+ 12  ஆசாப்,+ ஏமான்,+ எதித்தூன்,+ இவர்களுடைய மகன்கள், சகோதரர்கள் ஆகியோரின் குழுவைச் சேர்ந்த லேவிய பாடகர்கள்+ எல்லாரும் உயர்தர உடையை அணிந்துகொண்டு, ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் பிடித்துக்கொண்டு பலிபீடத்துக்குக் கிழக்கே நின்றார்கள். இவர்களுடன் 120 குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள்.+ 13  எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது யெகோவாவின் ஆலயத்தை மேகம் சூழ்ந்துகொண்டது.+ 14  உண்மைக் கடவுளின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ மேகம் சூழ்ந்துகொண்டதால் அங்கே நின்று சேவை செய்ய குருமார்களால் முடியவில்லை.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “புனிதப்படுத்தியிருந்த.”
வே.வா., “மூப்பர்களை.”
அதாவது, “கூடாரப் பண்டிகையின்போது.”
வே.வா., “லேவி கோத்திரத்தைச் சேர்ந்த குருமார்களும்.”