2 நாளாகமம் 7:1-22

  • ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைகிறது (1-3)

  • அர்ப்பண விழா கொண்டாட்டம் (4-10)

  • யெகோவா சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (11-22)

7  சாலொமோன் ஜெபம் செய்து முடித்ததுமே,+ வானத்திலிருந்து நெருப்பு வந்து+ தகன பலியையும் மற்ற பலிகளையும் சுட்டெரித்தது. ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+  யெகோவாவின் மகிமை யெகோவாவின் ஆலயத்தில் நிறைந்ததன் காரணமாக, குருமார்களால் யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைய முடியவில்லை.+  வானத்திலிருந்து நெருப்பு வந்ததையும், ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்ததையும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, அவர்கள் அங்கே தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்கள், “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று புகழ்ந்து பாடி யெகோவாவுக்கு நன்றி சொன்னார்கள்.  பின்பு, ராஜாவும் மக்கள் எல்லாரும் சேர்ந்து யெகோவாவுக்கு முன்னால் பலிகளைக் கொடுத்தார்கள்.+  சாலொமோன் ராஜா 22,000 மாடுகளையும் 1,20,000 ஆடுகளையும் பலி கொடுத்தார். இப்படி, ராஜாவும் மக்கள் எல்லாரும் உண்மைக் கடவுளுடைய ஆலயத்தின் அர்ப்பண விழாவை நடத்தினார்கள்.+  குருமார்கள் அவரவர் பணி செய்யும் இடங்களில் நின்றுகொண்டிருந்தார்கள். அதேபோல, லேவியர்களும் யெகோவாவுக்குப் பாடல்கள் பாட இசைக் கருவிகளை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்.+ (யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக இந்த இசைக் கருவிகளை தாவீது ராஜா உருவாக்கியிருந்தார். தாவீது பாடும்போது, “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி அவர்கள்* பதில்பாட்டுப் பாடுவார்கள்.) பின்பு, லேவியர்களுக்கு எதிரில் இருந்த குருமார்கள் சத்தமாக எக்காளங்களை ஊதினார்கள்.+ அப்போது, இஸ்ரவேலர்கள் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள்.  இத்தனை தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்கு சாலொமோன் செய்திருந்த செம்புப் பலிபீடத்தில்+ இடம் போதவில்லை. அதனால், தகன பலிகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொடுப்பதற்கு, யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை சாலொமோன் அன்றைக்குப் புனிதப்படுத்தினார்.  லெபோ-காமாத்* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை* குடியிருந்த இஸ்ரவேல் சபையார்+ எல்லாரும் மிகப் பெரிய கூட்டமாக அங்கே கூடிவந்திருந்தார்கள். சாலொமோன் ராஜா அவர்களுடன் சேர்ந்து ஏழு நாட்கள் பண்டிகை கொண்டாடினார்;+  முதல் ஏழு நாட்கள் பலிபீடத்தின் அர்ப்பண விழாவையும், அடுத்த ஏழு நாட்கள் பண்டிகையையும் அவர்கள் கொண்டாடினார்கள்; எட்டாம் நாளில்* விசேஷ மாநாட்டை நடத்தினார்கள்.+ 10  பின்பு, ஏழாம் மாதம் 23-ஆம் நாளில், மக்கள் எல்லாரையும் அவரவருடைய வீடுகளுக்கு சாலொமோன் அனுப்பி வைத்தார். அவர்களும் தங்களுடைய வீடுகளுக்கு மிகவும் சந்தோஷமாகத் திரும்பிப் போனார்கள்.+ தாவீதுக்கும் சாலொமோனுக்கும் தன்னுடைய மக்களான இஸ்ரவேலர்களுக்கும் யெகோவா செய்த நன்மைகளை நினைத்து மனமகிழ்ச்சி அடைந்தார்கள்.+ 11  இப்படி, யெகோவாவின் ஆலயத்தையும் தன்னுடைய அரண்மனையையும் சாலொமோன் கட்டி முடித்தார்;+ யெகோவாவின் ஆலயத்துக்காகவும் தன்னுடைய அரண்மனைக்காகவும் தான் செய்ய நினைத்த வேலைகளையெல்லாம் வெற்றிகரமாகச் செய்து முடித்தார்.+ 12  அன்றிரவு சாலொமோனின் கனவில் யெகோவா தோன்றி,+ “நீ செய்த ஜெபத்தைக் கேட்டேன். எனக்குப் பலி கொடுப்பதற்கான இடமாக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்தேன்.+ 13  மழை பெய்யாதபடி நான் வானத்தை அடைக்கும்போது, நிலத்தை அழிப்பதற்கு வெட்டுக்கிளிகளை அனுப்பும்போது, என் மக்களைத் தாக்க கொள்ளைநோயை அனுப்பும்போது 14  என் பெயரால் அழைக்கப்படும் என் மக்கள்+ தாழ்மையாக நடந்து+ என்னிடம் ஜெபம் செய்தால், பரலோகத்திலிருந்து அதைக் கேட்பேன்; தங்களுடைய பொல்லாத வழிகளைவிட்டு விலகி என்னைத் தேடினால்,+ அவர்களுடைய பாவத்தை மன்னிப்பேன், அவர்களுடைய தேசத்தைச் செழிப்பாக்குவேன்.+ 15  இந்த இடத்திலிருந்து ஒருவர் ஜெபம் செய்யும்போது நான் கண்ணோக்கிப் பார்ப்பேன், காதுகொடுத்துக் கேட்பேன்.+ 16  இந்த ஆலயத்தில் என்னுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதற்காக இந்த ஆலயத்தைத் தேர்ந்தெடுத்து புனிதப்படுத்தினேன்;+ என் கண்ணும் என் இதயமும் எப்போதும் இங்கேதான் இருக்கும்.+ 17  உன் அப்பா தாவீதைப் போல் நீயும் என்னுடைய கட்டளைகள் எல்லாவற்றையும் கடைப்பிடித்தால், என் விதிமுறைகளுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் கீழ்ப்படிந்தால்,+ 18  உன் சிம்மாசனத்தை நிலைக்கச் செய்வேன்;+ ‘இஸ்ரவேலை ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று உன் அப்பா தாவீதோடு செய்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவேன்.+ 19  ஆனால், நீ என் வழியைவிட்டு விலகி என் சட்டதிட்டங்களையும் என் கட்டளைகளையும் மீறினால், மற்ற தெய்வங்களை வழிபட்டு அவற்றின் முன்னால் தலைவணங்கினால்,+ 20  நான் கொடுத்த இந்தத் தேசத்திலிருந்து இஸ்ரவேலர்களை வேரோடு பிடுங்கியெறிவேன்.+ என்னுடைய பெயருக்காக நான் புனிதப்படுத்திய இந்த ஆலயத்தை என் கண் முன்னாலிருந்து ஒதுக்கித்தள்ளிவிடுவேன். எல்லா மக்களும் அதைப் பார்த்து ஏளனமாகப் பேசும்படி செய்வேன், கேலி கிண்டல் செய்யும் நிலைக்குக் கொண்டுவருவேன்.+ 21  இந்த ஆலயம் மண்மேடாகும். இதன் வழியாகப் போகிற எல்லாரும் இதை ஆச்சரியத்தோடு பார்ப்பார்கள்;+ ‘இந்தத் தேசத்தையும் இந்த ஆலயத்தையும் யெகோவா ஏன் இந்த நிலைமைக்குக் கொண்டுவந்துவிட்டார்?’+ என்று கேட்பார்கள். 22  பின்பு, ‘இவர்களுடைய முன்னோர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டுவந்த+ இவர்களுடைய முன்னோர்களின் கடவுளாகிய யெகோவாவை விட்டுவிட்டு,+ மற்ற தெய்வங்களை ஏற்றுக்கொண்டார்கள், அவற்றின் முன்னால் தலைவணங்கி அவற்றுக்குச் சேவை செய்தார்கள்.+ அதனால்தான் இந்தக் கஷ்டத்தையெல்லாம் இவர்களுக்குக் கொடுத்திருக்கிறார்’+ என்று சொல்வார்கள்” என்றார்.

அடிக்குறிப்புகள்

அநேகமாக, லேவியர்கள்.
வே.வா., “காமாத்தின் நுழைவாசல்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்குவரை.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
பண்டிகைக்கு அடுத்த நாள், அதாவது 15-ஆம் நாளில்.