2 ராஜாக்கள் 21:1-26

  • மனாசே யூதாவின் ராஜாவாகிறார்; அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார் (1-18)

    • எருசலேம் அழிக்கப்படுகிறது (12-15)

  • ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (19-26)

21  மனாசே+ 12 வயதில் ராஜாவாகி, 55 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் எப்சிபாள்.  யெகோவா வெறுக்கிற காரியங்களை மனாசே செய்தார். இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா விரட்டியடித்த மற்ற தேசத்தாரின் அருவருப்பான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினார்;+  தன்னுடைய அப்பாவான எசேக்கியா அழித்துப்போட்ட ஆராதனை மேடுகளைத்+ திரும்பக் கட்டினார்; இஸ்ரவேலின் ராஜா ஆகாபைப் போலவே+ இவரும் பாகாலுக்குப் பலிபீடங்கள் கட்டி, பூஜைக் கம்பத்தை* நிறுத்தினார்.+ வானத்துப் படைகள் முன்னால் மண்டிபோட்டு வணங்கி, அவற்றுக்குச் சேவை செய்தார்.+  அதோடு, யெகோவாவின் ஆலயத்திலேயே, “எருசலேமில் என் பெயரை நிலைநாட்டுவேன்”+ என்று யெகோவா சொல்லியிருந்த ஆலயத்திலேயே, பலிபீடங்களைக் கட்டினார்.+  வானத்துப் படைகளை வணங்குவதற்காக யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும்+ பலிபீடங்களைக் கட்டினார்.+  சொந்த மகனையே நெருப்பில் பலி கொடுத்தார்.* மாயமந்திர பழக்கங்களில் ஈடுபட்டார், சகுனங்கள் பார்த்தார்,+ ஆவிகளோடு பேசுகிறவர்களையும் குறிசொல்கிறவர்களையும் நியமித்தார்.+ யெகோவா வெறுக்கிற காரியங்களைக் கணக்குவழக்கில்லாமல் செய்து, அவரைப் புண்படுத்தினார்.  மனாசே தான் உண்டாக்கிய உருவச் சிலையை, அதாவது பூஜைக் கம்பத்தை,* கடவுளின் ஆலயத்தில் வைத்தார்;+ அந்த ஆலயத்தைப் பற்றித்தான் தாவீதிடமும் அவருடைய மகன் சாலொமோனிடமும் யெகோவா இப்படிச் சொல்லியிருந்தார்: “இஸ்ரவேலில் உள்ள எல்லா கோத்திரத்திலிருந்தும் நான் தேர்ந்தெடுத்த எருசலேமிலும், இந்த ஆலயத்திலும், என் பெயரை என்றென்றும் நிலைநாட்டுவேன்.+  இஸ்ரவேலர்களுக்கு நான் கொடுத்த கட்டளைகள் எல்லாவற்றையும், அதாவது என்னுடைய ஊழியன் மோசே கொடுத்த திருச்சட்டம் முழுவதையும், அப்படியே அவர்கள் பின்பற்றி நடந்தால்+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்தைவிட்டு ஒருபோதும் அவர்களை அலைந்து திரிய விடமாட்டேன்.”+  ஆனால், அவர்கள் கீழ்ப்படியவில்லை. இஸ்ரவேலர்களின் கண் முன்னால் யெகோவா அழித்துப்போட்ட மற்ற தேசத்தார் செய்ததைவிட படுபயங்கரமான காரியங்களைச் செய்ய மனாசே அந்த மக்களைத் தூண்டிக்கொண்டே இருந்தார். இப்படி, கடவுளைவிட்டு அவர்கள் வழிவிலகிப் போகும்படி செய்தார்.+ 10  யெகோவா தன்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகள் மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தார்.+ 11  “யூதாவின் ராஜா மனாசே இந்த அருவருப்பான காரியங்களையெல்லாம் செய்திருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த எமோரியர்கள்+ எல்லாரையும்விட படுமோசமான காரியங்களைச் செய்திருக்கிறான்.+ அருவருப்பான* சிலைகளை நிறுத்தி யூதா மக்களைப் பாவம் செய்ய வைத்திருக்கிறான். 12  அதனால், இஸ்ரவேலின் கடவுளான யெகோவா சொல்வது என்னவென்றால், ‘எருசலேம்மீதும் யூதாமீதும் பயங்கரமான அழிவைக் கொண்டுவரப்போகிறேன்.+ அதைப் பற்றிக் கேள்விப்படுகிறவர்கள் எல்லாரும் அதிர்ச்சியடைவார்கள்.*+ 13  சமாரியாவை அளந்த+ அதே அளவுநூலால் எருசலேமையும் அளப்பேன்;+ ஆகாப் வீட்டாருக்குப் பயன்படுத்திய அதே தூக்குநூலை* எருசலேமுக்கும் பயன்படுத்துவேன்.+ ஒரு கிண்ணத்தை ஒருவன் சுத்தமாகத் துடைத்துக் கவிழ்த்து வைப்பதுபோல, நான் எருசலேமைத் துடைத்துப்போடுவேன்.+ 14  என் சொந்த மக்களில்* மீதியாக இருப்பவர்களைக் கைவிடுவேன்,+ எதிரிகளின் கையில் கொடுப்பேன்; அந்த எதிரிகள் எல்லாரும் அவர்களைக் கொள்ளையடித்து கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போவார்கள்.+ 15  அவர்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து வந்த நாள்முதல் இன்றுவரை, நான் வெறுக்கிற காரியங்களைச் செய்து என்னைப் புண்படுத்தியதால் இப்படியெல்லாம் செய்வேன்’”+ என்று சொன்னார். 16  யூதா மக்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கு மனாசே காரணமாக இருந்தார்; அதுமட்டுமல்லாமல், எருசலேமின் ஓர் எல்லைமுதல் மறு எல்லைவரை ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.*+ 17  மனாசேயின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும், அவர் செய்த பாவங்களைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 18  பின்பு, மனாசே இறந்துபோனார்.* அவருடைய அரண்மனையிலிருந்த தோட்டத்தில், அதாவது ஊத்சா தோட்டத்தில், அவரை அடக்கம் செய்தார்கள்.+ அவருக்குப் பிறகு, அவருடைய மகன் ஆமோன் ராஜாவானார். 19  ஆமோன்+ 22 வயதில் ராஜாவாகி, இரண்டு வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் மெசுல்லேமேத். அவள் யோத்பாவைச் சேர்ந்த ஆரூத்சின் மகள். 20  ஆமோன் தன்னுடைய அப்பா மனாசேயைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்துவந்தார்.+ 21  தன்னுடைய அப்பா வழியிலேயே நடந்தார், தன்னுடைய அப்பா வழிபட்ட அருவருப்பான சிலைகளுக்கு முன்னால் மண்டிபோட்டு வழிபட்டுவந்தார்.+ 22  தன்னுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை ஒதுக்கித்தள்ளினார். யெகோவாவின் வழியில் ஆமோன் நடக்கவில்லை.+ 23  கடைசியில், அவருடைய ஊழியர்கள் அவருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டி, அவருடைய அரண்மனையிலேயே அவரைக் கொலை செய்தார்கள். 24  ஆமோன் ராஜாவைக் கொன்ற அந்தச் சதிகாரர்கள் எல்லாரையும் பொதுமக்கள் வெட்டிக் கொன்றார்கள். பின்பு, அவருடைய மகன் யோசியாவை ராஜாவாக்கினார்கள்.+ 25  ஆமோனின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்கள் எல்லாம் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 26  ஊத்சா தோட்டத்தில் இருந்த அவருடைய கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.+ அடுத்ததாக, அவருடைய மகன் யோசியா+ ராஜாவானார்.

அடிக்குறிப்புகள்

நே.மொ., “நெருப்பைக் கடக்க வைத்தார்.”
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
நே.மொ., “கேள்விப்படுகிறவர்களின் இரண்டு காதுகளும் கூசும்.”
வே.வா., “தூக்குக்குண்டை.”
நே.மொ., “என் சொத்தில்.”
நே.மொ., “அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தினார்.”
நே.மொ., “தன் முன்னோர்களோடு படுக்க வைக்கப்பட்டார்.”