2 ராஜாக்கள் 23:1-37

  • யோசியா சீர்திருத்தம் செய்கிறார் (1-20)

  • பஸ்கா கொண்டாடப்படுகிறது (21-23)

  • யோசியா செய்த கூடுதலான சீர்திருத்தங்கள் (24-27)

  • யோசியா இறந்துபோகிறார் (28-30)

  • யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (31-33)

  • யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (34-37)

23  அப்போது, ராஜா ஆள் அனுப்பி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த எல்லா பெரியோர்களையும்* ஒன்றுகூட்டினார்.+  பின்பு, யூதா ஆண்கள் எல்லாரையும் எருசலேம் மக்கள் எல்லாரையும் குருமார்களையும் தீர்க்கதரிசிகளையும், சொல்லப்போனால் சிறியவர்கள்முதல் பெரியவர்கள்வரை எல்லாரையும், கூட்டிக்கொண்டு யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார். யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒப்பந்தப்+ புத்தகத்தில்+ உள்ள எல்லா வார்த்தைகளையும் அவர்கள் முன்னால் சத்தமாக வாசித்தார்.+  தூணுக்குப் பக்கத்தில் நின்றுகொண்டு, இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடப்பதாக யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார்;*+ அதாவது யெகோவாவின் வழியில் நடப்பதாகவும், அவருடைய கட்டளைகளுக்கும் நினைப்பூட்டுதல்களுக்கும் சட்டதிட்டங்களுக்கும் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிவதாகவும் ஒப்பந்தம் செய்தார். அந்த ஒப்பந்தத்தின்படி நடப்போம் என்று மக்கள் எல்லாரும் உறுதிகூறினார்கள்.+  பின்பு பாகாலுக்காக, பூஜைக் கம்பத்துக்காக,* வானத்துப் படைகளுக்காகச் செய்யப்பட்ட எல்லா சாமான்களையும் யெகோவாவின் ஆலயத்திலிருந்து வெளியே கொண்டுவரச் சொல்லி,+ தலைமைக் குரு இல்க்கியாவுக்கும்+ மற்ற குருமார்களுக்கும் காவலாளிகளுக்கும் ராஜா கட்டளையிட்டார். பின்பு, எருசலேமுக்கு வெளியே உள்ள கீதரோன் மலைச் சரிவுகளில் அவற்றை எரித்து, சாம்பலை பெத்தேலுக்குக் கொண்டுபோனார்.+  யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் சுற்றுவட்டாரங்களிலும் இருந்த ஆராதனை மேடுகளில் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்காக யூதாவின் ராஜாக்கள் நியமித்திருந்த பொய் தெய்வ பூசாரிகளை நீக்கினார்; பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ராசி மண்டலத்திலுள்ள நட்சத்திரங்களுக்கும் வானத்துப் படைகளுக்கும் பலியிட்டு புகை எழும்பிவரச் செய்கிறவர்களையும் நீக்கினார்.+  பூஜைக் கம்பத்தை*+ யெகோவாவின் ஆலயத்திலிருந்து எடுத்து எருசலேமின் எல்லையில் இருக்கிற கீதரோன் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோய்ச் சுட்டெரித்து,+ தூள்தூளாக்கி அந்தத் தூளை பொதுமக்களின் கல்லறையில் தூவிவிட்டார்.+  அதோடு, யெகோவாவின் ஆலயத்தில் ஆண் விபச்சாரக்காரர்கள்+ தங்கியிருந்த இடங்களையும் இடித்துப்போட்டார்; இங்குதான் பூஜைக் கம்பத்துக்காக* பெண்கள் கூடாரங்களை நெய்துவந்தார்கள்.  கெபாமுதல்+ பெயெர்-செபாவரை+ இருந்த ஆராதனை மேடுகளில் குருமார்கள் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்திருந்தார்கள்; அந்த ஆராதனை மேடுகளை மீண்டும் பயன்படுத்த முடியாதபடி யோசியா ராஜா செய்தார்; பின்பு, அந்தக் குருமார்கள் எல்லாரையும் யூதாவின் நகரங்களிலிருந்து எருசலேமுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். நகரத் தலைவரான யோசுவாவின் நுழைவாசலில் இருந்த ஆராதனை மேடுகளையும் இடித்துப்போட்டார்; நகரவாசலுக்குள் நுழைகிற ஒருவருடைய இடது பக்கத்தில் இவை இருந்தன.  எருசலேமில் இருந்த யெகோவாவின் பலிபீடத்தில் சேவை செய்ய இந்தக் குருமார்கள் அனுமதிக்கப்படவில்லை,+ ஆனால் மற்ற குருமார்களுடன் சேர்ந்து புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். 10  பென்-இன்னோம்* பள்ளத்தாக்கில்*+ இருந்த தோப்பேத்தை*+ இனி வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி யோசியா ராஜா செய்தார்; யாரும் தன்னுடைய மகனையோ மகளையோ மோளேகு தெய்வத்துக்கு நெருப்பில் பலி கொடுக்கக் கூடாது*+ என்பதற்காக இப்படிச் செய்தார். 11  யூதாவின் ராஜாக்களால் சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்த குதிரைகள் நுழைவு மண்டபத்திலிருந்த அரண்மனை அதிகாரி நாத்தான்-மெலெக்கின் அறை* வழியாக யெகோவாவின் ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரதங்களை+ அவர் எரித்துப்போட்டார். 12  ஆகாசின் மாடி அறை மேல்தளத்தில் யூதாவின் ராஜாக்கள் கட்டியிருந்த பலிபீடங்களை இடித்துப்போட்டார்.+ அதோடு, யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் மனாசே கட்டியிருந்த பலிபீடங்களையும் தகர்த்துப்போட்டார்.+ அவற்றைத் தவிடுபொடியாக்கி, அந்தத் தூளை கீதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தார். 13  எருசலேமுக்கு எதிரில், ‘அழிவின் மலைக்கு’* தெற்கில்* இருந்த ஆராதனை மேடுகளை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி செய்தார்; சீதோனியர்கள் வணங்கிய அருவருப்பான அஸ்தரோத் தேவிக்காகவும், மோவாபியர்கள் வணங்கிய அருவருப்பான கேமோஷ் தெய்வத்துக்காகவும், அம்மோனியர்கள் வணங்கிய அருவருப்பான மில்கோம் தெய்வத்துக்காகவும்+ இஸ்ரவேலின் ராஜா சாலொமோன் இவற்றைக் கட்டியிருந்தார். 14  யோசியா ராஜா பூஜைத் தூண்களை நொறுக்கிப்போட்டார், பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார்;+ அந்த இடங்களை மனித எலும்புகளால் நிரப்பினார். 15  இஸ்ரவேலர்களைப் பாவத்தில் விழவைக்க நேபாத்தின் மகன் யெரொபெயாம் பெத்தேலில் கட்டிய ஆராதனை மேட்டையும் பலிபீடத்தையும்+ உடைத்துப்போட்டார். அவற்றை உடைத்த பின்பு ஆராதனை மேட்டை எரித்துப்போட்டார், அதைத் தூள்தூளாக்கினார்; அங்கிருந்த பூஜைக் கம்பத்தை* எரித்துப்போட்டார்.+ 16  யோசியா திரும்பிப் பார்த்தபோது, அங்கே இருக்கிற மலைமேல் கல்லறைகள் இருப்பதைக் கண்டார்; உடனே, அங்கிருந்த எலும்புகளை எடுத்துவரச் சொன்னார்; அவற்றை அந்தப் பலிபீடத்தில் எரித்து, அதை வழிபாட்டுக்காகப் பயன்படுத்த முடியாதபடி செய்தார். இப்படி நடக்குமென்று உண்மைக் கடவுளின் ஊழியர் மூலம் சொல்லப்பட்ட யெகோவாவின் வார்த்தை அப்போது நிறைவேறியது.+ 17  பின்பு, “அதோ தெரிகிறதே, அது யாருடைய கல்லறை?” என்று ராஜா கேட்டார். அப்போது அந்த நகரத்தைச் சேர்ந்த ஆட்கள், “அது யூதாவிலிருந்து வந்த உண்மைக் கடவுளின் ஊழியருடைய+ கல்லறை. பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கு நீங்கள் இப்படியெல்லாம் செய்வீர்கள் என்பதை அவர் முன்கூட்டியே சொல்லியிருந்தார்” என்றார்கள். 18  அதற்கு அவர், “சரி, அவருடைய எலும்புகளை யாரும் எடுக்க வேண்டாம்; அப்படியே இருக்கட்டும்” என்று சொன்னார். அதனால், அவருடைய எலும்புகளையும், சமாரியாவிலிருந்து வந்திருந்த தீர்க்கதரிசியின் எலும்புகளையும் அவர்கள் எடுக்கவில்லை.+ 19  கடவுளைப் புண்படுத்துவதற்காக, சமாரியா நகரங்களில் இருந்த ஆராதனை மேடுகளில் இஸ்ரவேலின் ராஜாக்கள் கட்டியிருந்த எல்லா கோயில்களையும் யோசியா இடித்துப்போட்டார்.+ பெத்தேலில் செய்தபடியே இங்கேயும் செய்தார்.+ 20  அந்த ஆராதனை மேடுகளில் இருந்த எல்லா குருமார்களையும் பலிபீடங்களின் மேல் கொன்றுபோட்டார். மனித எலும்புகளை அவற்றின்மேல் எரித்துப்போட்டார்.+ அதன் பின்பு, எருசலேமுக்குத் திரும்பினார். 21  பின்பு மக்கள் எல்லாரிடமும், “ஒப்பந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டபடி+ உங்களுடைய கடவுளான யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகை கொண்டாடுங்கள்”+ என்று ராஜா கட்டளையிட்டார். 22  இஸ்ரவேலில் நியாயாதிபதிகள் நியாயம் வழங்கிய காலத்திலோ இஸ்ரவேலின் ராஜாக்களும் யூதாவின் ராஜாக்களும் ஆட்சி செய்த காலத்திலோ அந்தளவு பிரமாண்டமாக பஸ்கா பண்டிகை கொண்டாடப்படவில்லை.+ 23  யோசியா ராஜா ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், எருசலேமில் யெகோவாவுக்கு இந்த பஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. 24  ஆவிகளோடு பேசுகிறவர்களையும், குறிசொல்கிறவர்களையும்,+ குலதெய்வச் சிலைகளையும்,+ அருவருப்பான* சிலைகளையும், யூதாவிலும் எருசலேமிலும் இருந்த அருவருப்பான எல்லாவற்றையும் அவர் ஒழித்துக்கட்டினார். குருவாகிய இல்க்கியா யெகோவாவின் ஆலயத்தில் கண்டெடுத்த+ திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தபடியே+ செய்தார். 25  யோசியா முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் யெகோவா பக்கம் திரும்பினார்;+ மோசேயின் திருச்சட்டத்தில் உள்ள எல்லாவற்றையும் கடைப்பிடித்தார். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி, வேறெந்த ராஜாவும் அவரைப் போல் இருக்கவில்லை. 26  ஆனாலும், யூதா மக்கள்மீது யெகோவாவுக்கு இருந்த கடும் கோபம் தணியவே இல்லை. ஏனென்றால், கடவுள் அருவருக்கிற காரியங்களைச் செய்து மனாசே அவரைப் புண்படுத்தியிருந்தார்.+ 27  அதனால் யெகோவா, “இஸ்ரவேலை என் கண் முன்னாலிருந்து நீக்கியதுபோல்+ யூதாவையும் நீக்கிவிடுவேன்;+ நான் தேர்ந்தெடுத்த எருசலேம் நகரத்தை ஒதுக்கித்தள்ளுவேன்; ‘என் பெயர் இங்கே நிலைத்துநிற்கும்’+ என்று எந்த ஆலயத்தைப் பற்றி சொன்னேனோ அந்த ஆலயத்தையும் நிராகரிப்பேன்” என்று சொன்னார். 28  யோசியாவின் வாழ்க்கையில் நடந்த மற்ற விஷயங்களைப் பற்றியும், அவர் செய்த எல்லாவற்றைப் பற்றியும் யூதா ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 29  யோசியாவின் காலத்தில், அசீரிய ராஜாவுக்கு உதவ யூப்ரடிஸ்* ஆற்றின் அருகே எகிப்தின் ராஜாவான பார்வோன் நேகோ வந்தான். உடனே யோசியா அவனை எதிர்த்துப் போர் செய்யப் போனார். ஆனால் நேகோ, மெகிதோவில்+ அவரைப் பார்த்ததும் அங்கே கொன்றுபோட்டான். 30  அப்போது யோசியாவின் ஊழியர்கள் அவருடைய உடலை ஒரு ரதத்தில் வைத்து, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அங்கே அவருடைய கல்லறையில் அடக்கம் செய்தார்கள். பின்பு, பொதுமக்கள் அவருடைய மகன் யோவாகாசை அபிஷேகம் செய்து ராஜாவாக்கினார்கள்.+ 31  யோவாகாஸ்+ ராஜாவானபோது அவருக்கு 23 வயது; அவர் எருசலேமில் மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அமுத்தாள்;+ அவள் லிப்னாவைச் சேர்ந்த எரேமியாவின் மகள். 32  யோவாகாஸ் தன்னுடைய முன்னோர்களைப் போலவே யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்தார்.+ 33  காமாத் பகுதியிலிருந்த ரிப்லாவில் பார்வோன் நேகோ+ அவரைச் சிறையில் அடைத்தான்;+ எருசலேமில் அவருடைய ஆட்சிக்கு முடிவுகட்டினான். பின்பு, 100 தாலந்து* வெள்ளியையும் ஒரு தாலந்து தங்கத்தையும் தரச்சொல்லி, அவருடைய தேசத்துக்கு அபராதம் விதித்தான்.+ 34  அதோடு, யோசியாவின் இடத்தில் அவருடைய மகன் எலியாக்கீமை ராஜாவாக நியமித்தான்; எலியாக்கீமின் பெயரை யோயாக்கீம் என்று மாற்றினான். ஆனால், யோவாகாசை எகிப்துக்குக் கொண்டுபோனான்;+ கடைசியில், யோவாகாஸ் அங்கே இறந்துபோனார்.+ 35  பார்வோன் கேட்ட வெள்ளியையும் தங்கத்தையும் யோயாக்கீம் கொடுத்தார். ஆனால், அவன் கேட்டதைக் கொடுப்பதற்காக, மக்கள்மீது வரி விதித்தார். பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் இருந்த நிலங்களுக்கு ஏற்ப அவர்களிடமிருந்து தங்கத்தையும் வெள்ளியையும் வசூலித்தார். 36  யோயாக்கீம்+ 25 வயதில் ராஜாவாகி, 11 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+ அவருடைய அம்மா பெயர் செபுதாள்; அவள் ரூமாவைச் சேர்ந்த பெதாயாவின் மகள். 37  யோயாக்கீம் தன்னுடைய முன்னோர்களைப் போலவே+ யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார்.+

அடிக்குறிப்புகள்

வே.வா., “மூப்பர்களையும்.”
வே.வா., “ஒப்பந்தத்தைப் புதுப்பித்தார்.”
நே.மொ., “மோளேகு தெய்வத்துக்காக நெருப்பைக் கடக்க வைக்கக் கூடாது.”
இந்த இடம் எருசலேமுக்கு வெளியே இருந்தது; விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் தங்களுடைய குழந்தைகளை இங்கு பலி கொடுத்தார்கள்.
சொல் பட்டியலில் “கெஹென்னா” என்ற தலைப்பைப் பாருங்கள்.
அர்த்தம், “இன்னோம் மகன்களின்.”
வே.வா., “சாப்பாட்டு அறை.”
அதாவது, “ஒலிவ மலைக்கு.” குறிப்பாக, அதன் தென்கோடி ‘குற்றத்தின் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
நே.மொ., “வலது பக்கத்தில்.” ஒருவர் கிழக்கு நோக்கி நிற்கும்போது, தெற்கில்.
இதற்கான எபிரெய வார்த்தை “சாணம்” என்ற வார்த்தையோடு தொடர்புடையதாக இருக்கலாம். வெறுப்பைக் காட்டுவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
அதாவது, “ஐப்பிராத்து.”
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.