2 ராஜாக்கள் 3:1-27

  • யோராம் இஸ்ரவேலின் ராஜாவாகிறார் (1-3)

  • இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் கலகம் (4-25)

  • மோவாப் தோற்கடிக்கப்படுகிறது (26, 27)

3  யோசபாத் ராஜா யூதாவை ஆட்சி செய்த 18-ஆம் வருஷத்தில், ஆகாபின் மகன் யோராம்+ சமாரியாவில் ராஜாவானார். அவர் இஸ்ரவேலை 12 வருஷங்கள் ஆட்சி செய்தார்.  யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவந்தாலும், அவருடைய அப்பா அம்மா அளவுக்கு அவர் மோசமானவராக இல்லை; ஏனென்றால், பாகாலுக்காகத் தன்னுடைய அப்பா நிறுத்தியிருந்த பூஜைத் தூணை அவர் உடைத்துப்போட்டார்.+  இருந்தாலும், இஸ்ரவேலர்களைப் பாவம் செய்யத் தூண்டிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவ வழியைவிட்டு விலகவே இல்லை,+ விடாப்பிடியாக அந்தக் கெட்ட வழியிலேயே நடந்தார்.  அந்தக் காலத்தில், மோவாபின் ராஜாவான மேசா ஆட்டு மந்தைகளை வைத்திருந்தான். 1,00,000 செம்மறி ஆட்டுக்குட்டிகளையும் மயிர் கத்தரிக்கப்படாத 1,00,000 செம்மறி ஆட்டுக்கடாக்களையும் இஸ்ரவேல் ராஜாவுக்குக் கப்பம் கட்டிவந்திருந்தான்.  ஆகாப் இறந்ததும்,+ மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்தான்.+  அப்போது, யோராம் ராஜா சமாரியாவிலிருந்து போய் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டினார்.  அதோடு, யூதாவின் ராஜாவான யோசபாத்துக்குச் செய்தியும் அனுப்பினார்; “மோவாபின் ராஜா எனக்கு எதிராகக் கலகம் செய்கிறான். அவனை எதிர்த்துப் போர் செய்ய என்னோடு வருவீர்களா?” என்று கேட்டார். அதற்கு யோசபாத், “வருகிறேன்.+ நீங்கள் வேறு நான் வேறு அல்ல. என்னுடைய மக்கள் உங்களுடைய மக்கள், என்னுடைய குதிரைகள் உங்களுடைய குதிரைகள்”+ என்று சொன்னார்.  பின்பு யோசபாத், “நாம் எந்த வழியாகப் போகலாம்?” என்று கேட்டார். அதற்கு யோராம், “ஏதோம் வனாந்தரத்தின் வழியாகப் போகலாம்” என்று சொன்னார்.  யூதாவின் ராஜாவையும் ஏதோமின்+ ராஜாவையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேலின் ராஜா கிளம்பினார். அவர்கள் சுற்றுவழியில் ஏழு நாட்கள் பயணம் செய்தார்கள். அவர்களோடு வந்த வீரர்களுக்கும் கால்நடைகளுக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. 10  அப்போது இஸ்ரவேலின் ராஜா, “மோவாபியர்களின் கையில் கொடுப்பதற்காக இந்த மூன்று ராஜாக்களையும் யெகோவா வரவழைத்திருக்கிறாரே, என்ன கொடுமை!” என்று சொன்னார். 11  அதற்கு யோசபாத், “இங்கே யெகோவாவின் தீர்க்கதரிசி யாராவது இருக்கிறார்களா? இருந்தால், அவர் மூலம் யெகோவாவிடம் விசாரிக்கலாமே?”+ என்று சொன்னார். அப்போது இஸ்ரவேல் ராஜாவின் ஊழியர்களில் ஒருவர், “சாப்பாத்தின் மகன் எலிசா+ இங்கே இருக்கிறார்; எலியா கை கழுவ தண்ணீர் ஊற்றிவந்தவர் இவர்தான்”*+ என்று சொன்னார். 12  அதற்கு யோசபாத், “அவர் யெகோவாவின் செய்தியைச் சொல்பவர்” என்றார். அதனால், யோசபாத்தும் இஸ்ரவேலின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் எலிசாவிடம் போனார்கள். 13  எலிசா இஸ்ரவேலின் ராஜாவிடம், “நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?*+ உங்கள் அப்பாவின் தீர்க்கதரிசிகளிடமும் அம்மாவின் தீர்க்கதரிசிகளிடமும் போய்க் கேளுங்கள்”+ என்று சொன்னார். அதற்கு இஸ்ரவேலின் ராஜா, “அப்படிச் சொல்லாதீர்கள். மோவாபியர்களின் கையில் கொடுப்பதற்காக மூன்று ராஜாக்களையும் யெகோவாதான் வரவழைத்திருக்கிறார்” என்று சொன்னார். 14  அப்போது எலிசா, “நான் சேவை செய்கிற பரலோகப் படைகளின் யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* யூதாவின் ராஜா யோசபாத்மீது+ வைத்திருக்கிற மரியாதையால்தான் உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்; இல்லாவிட்டால், உங்கள் முகத்தைக்கூட பார்த்திருக்க மாட்டேன்.+ 15  யாழ் வாசிக்கிற*+ ஒருவனை வரச் சொல்லுங்கள்” என்றார். அவன் யாழ் வாசிக்க ஆரம்பித்ததும், யெகோவாவின் சக்தி* எலிசாமீது வந்தது.+ 16  அப்போது அவர், “இந்தப் பள்ளத்தாக்கு* முழுவதும் குழிகளைத் தோண்டுங்கள் என்று யெகோவா சொல்கிறார். 17  ‘காற்றும் அடிக்காது, மழையும் பெய்யாது, ஆனாலும் இந்தப் பள்ளத்தாக்கு* முழுவதும் தண்ணீர் நிரம்பிவழியும்.+ அந்தத் தண்ணீரை நீங்களும் குடிப்பீர்கள், உங்களுடைய கால்நடைகளும் மற்ற விலங்குகளும் குடிக்கும்’ என்று யெகோவா சொல்கிறார். 18  இதெல்லாம் யெகோவாவுக்கு ஒன்றுமே இல்லை.+ மோவாபைத் தோற்கடிக்கக்கூட அவர் உங்களுக்கு உதவி செய்வார்.+ 19  மதில் சூழ்ந்த எல்லா நகரங்களையும்+ முக்கியமான எல்லா நகரங்களையும் தரைமட்டமாக்குங்கள். நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போடுங்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துவிடுங்கள். நல்ல நிலங்கள் எல்லாவற்றிலும் கற்களைப் போட்டு நாசமாக்குங்கள்”+ என்று சொன்னார். 20  காலையில், அதாவது உணவுக் காணிக்கை கொடுக்கும் நேரத்தில்,+ ஏதோமின் திசையிலிருந்து திடீரென்று தண்ணீர் பாய்ந்து வந்தது; அதனால், அந்தப் பள்ளத்தாக்கு முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. 21  தங்களுக்கு எதிராகப் போர் செய்ய ராஜாக்கள் வந்திருக்கிறார்கள் என்பதை மோவாபியர்கள் எல்லாரும் கேள்விப்பட்டவுடன், ஆயுதமேந்தி போர் செய்யக்கூடிய ஆண்கள் எல்லாரையும் ஒன்றுதிரட்டினார்கள். பின்பு, அவர்கள் எல்லையில் போய் நின்றார்கள். 22  விடியற்காலையில் அவர்கள் எழுந்து பார்த்தபோது, பள்ளத்தாக்கிலிருந்த தண்ணீர்மீது சூரிய ஒளி பட்டது; எதிர் திசையில் இருந்த மோவாபியர்களுக்கு அது இரத்தம்போல் சிவப்பாகத் தெரிந்தது. 23  உடனே அவர்கள், “அதோ பாருங்கள், இரத்தம்! அந்த ராஜாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு செத்துவிட்டார்கள். மோவாபியர்களே, வாருங்கள் கொள்ளையடிக்கலாம்!”+ என்று சொல்லிக்கொண்டார்கள். 24  அவர்கள் இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் வந்ததும், இஸ்ரவேல் வீரர்கள் எழுந்து மோவாபியர்களை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தார்கள். உடனே அவர்கள் தப்பி ஓடினார்கள்.+ அவர்களைத் துரத்திக்கொண்டு இஸ்ரவேலர்கள் மோவாபுக்குள் போனார்கள். வழியெல்லாம் மோவாபியர்களை வீழ்த்திக்கொண்டே போனார்கள். 25  மோவாபியர்களின் நகரங்களை இஸ்ரவேலர்கள் தரைமட்டமாக்கினார்கள். வீரர்கள் ஒவ்வொருவரும் நல்ல நிலங்களில் கற்களை எறிந்தார்கள், அவை எல்லாவற்றையும் கற்களால் நிரப்பினார்கள். எல்லா நீரூற்றுகளையும் அடைத்துப்போட்டார்கள்,+ நல்ல மரங்கள் எல்லாவற்றையும் வெட்டிப் போட்டார்கள்.+ கற்களால் கட்டப்பட்ட கீர்-ஆரேசேத்தின்+ மதில் மட்டும்தான் கடைசியாக மிஞ்சியிருந்தது. கல்லெறியும் வீரர்கள் அதைச் சூழ்ந்துகொண்டு அதையும் தாக்கினார்கள். 26  தன்னுடைய படை தோற்றுப்போனது என்று மோவாபின் ராஜாவுக்குத் தெரிந்ததும், வாளேந்திய 700 வீரர்களை அவன் கூட்டிக்கொண்டு போய் எதிரி படைக்குள் நுழைந்து ஏதோமின் ராஜாவைத்+ தாக்க முயற்சி செய்தான்; ஆனால் அவர்களால் முடியவில்லை. 27  அதனால், அவன் தனக்குப் பிறகு ராஜாவாக வேண்டிய தன்னுடைய மூத்த மகனை மதில்மீது தகன பலி கொடுத்தான்.+ இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் பயங்கர கோபம் மூண்டது; அதனால், அவர்கள் அவனைவிட்டுப் பின்வாங்கி தங்களுடைய தேசத்துக்குத் திரும்பினார்கள்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “எலியாவின் ஊழியராக இருந்தவர் இவர்தான்.”
நே.மொ., “உங்களுக்கும் எனக்கும் என்ன?”
வே.வா., “யெகோவா உயிரோடு இருப்பது எந்தளவு நிச்சயமோ அந்தளவு நிச்சயமாகச் சொல்கிறேன்.”
நே.மொ., “கை.”
வே.வா., “இசைக்கலைஞன்.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”
அதாவது, “காட்டாற்றுப் பள்ளத்தாக்கு.”