2 ராஜாக்கள் 7:1-20

  • பஞ்சம் முடியப்போவதை எலிசா முன்னறிவிக்கிறார் (1, 2)

  • ஓடிப்போன சீரியர்களின் முகாமில் உணவு (3-15)

  • எலிசாவின் தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது (16-20)

7  அப்போது எலிசா, “யெகோவா சொல்வதைக் கேளுங்கள். ‘நாளைக்கு இந்நேரம் சமாரியாவின் நகரவாசலில்* ஒரு சியா அளவு* நைசான மாவு ஒரு சேக்கலுக்கும்* இரண்டு சியா அளவு பார்லி ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.  அதைக் கேட்டதும் ராஜாவின் நம்பிக்கைக்குரிய படை அதிகாரி, “யெகோவா வானத்தின் கதவுகளைத் திறந்து கொட்டினால்கூட இது நடக்காது”+ என்று உண்மைக் கடவுளின் ஊழியரிடம் சொன்னார். அதற்கு அவர், “அதை உன் கண்ணால் பார்ப்பாய்,+ ஆனால் சாப்பிட மாட்டாய்”+ என்று சொன்னார்.  நகரத்தின் நுழைவாசலுக்குப் பக்கத்தில் தொழுநோயாளிகள் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.+ அவர்கள், “நாம் ஏன் இங்கேயே கிடந்து சாக வேண்டும்?  நகரத்தில் இருப்பவர்களே பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கிறார்கள்.+ அதனால் நாம் அங்கே போனாலும் சாகத்தான் போகிறோம், இங்கேயே இருந்தாலும் சாகத்தான் போகிறோம். அதனால், சீரியர்களின் முகாமுக்குப் போகலாம். அவர்கள் நம்மை உயிரோடு விட்டால் விடட்டும், இல்லையென்றால் கொன்றுபோடட்டும்” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டார்கள்.  இருட்டத் தொடங்கியபோது, சீரியர்கள் முகாம்போட்டிருந்த இடத்துக்கு அவர்கள் போனார்கள். முகாமின் எல்லையை அவர்கள் அடைந்தபோது அங்கே யாருமே இருக்கவில்லை.  ஏனென்றால், போர் ரதங்களும் குதிரைகளும் வருகிற சத்தத்தை, ஒரு பெரிய படை வருகிற சத்தத்தை, சீரியர்கள் கேட்கும்படி யெகோவா செய்திருந்தார்.+ அதைக் கேட்டதும், “இஸ்ரவேலின் ராஜா நம்மோடு போர் செய்வதற்காக ஏத்தியர்களின் ராஜாக்களையும் எகிப்தின் ராஜாக்களையும் கூலி கொடுத்து வரவழைத்திருக்கிறான்” என்று பேசிக்கொண்டார்கள்.  உடனே எழுந்து, இருட்டத் தொடங்கிய அந்த நேரத்தில் ஓடிப்போனார்கள். கூடாரங்களையும் குதிரைகளையும் கழுதைகளையும் முகாமில் இருந்த எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடிப்போனார்கள்.  முகாமின் எல்லையை அந்தத் தொழுநோயாளிகள் நெருங்கியதும் முதலில் ஒரு கூடாரத்துக்குள் நுழைந்து, சாப்பிட்டுக் குடித்தார்கள். அங்கிருந்த தங்கத்தையும் வெள்ளியையும் உடைகளையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தார்கள். மறுபடியும் வந்து வேறொரு கூடாரத்துக்குள் நுழைந்து அங்கிருந்த பொருள்களை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தார்கள்.  ஆனால் கடைசியில், “நாம் செய்வது சரியில்லை. இந்த நல்ல செய்தியைக் கண்டிப்பாக மற்றவர்களிடம் சொல்ல வேண்டும்! விடியும்வரை சொல்லாமல் இருந்தால் நமக்குத் தண்டனைதான் கிடைக்கும். அதனால், இப்போதே போய் அரண்மனையில் இருப்பவர்களிடம் சொல்லிவிடலாம்” என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். 10  அதனால், அவர்கள் போய் நகரத்தின் வாயிற்காவலர்களைச் சத்தமாகக் கூப்பிட்டு, “நாங்கள் சீரியர்களின் முகாமுக்குப் போயிருந்தோம். அங்கே யாருமே இல்லை. ஒரு சத்தமும் இல்லை. கட்டிப்போடப்பட்டிருந்த குதிரைகளும் கழுதைகளும்தான் இருந்தன. கூடாரங்களில் எல்லாமே போட்டது போட்டபடியே கிடந்தது” என்று சொன்னார்கள். 11  உடனே, வாயிற்காவலர்கள் அரண்மனையில் இருப்பவர்களுக்கு இந்த விஷயத்தைச் சத்தமாகச் சொன்னார்கள். 12  அந்த ராத்திரி நேரத்தில் ராஜா உடனே எழுந்து தன் ஊழியர்களிடம், “சீரியர்கள் ஏன் இப்படிச் செய்திருக்கிறார்கள் என்பதை நான் சொல்கிறேன். நாம் பசியும் பட்டினியுமாகக் கிடக்கிறோம் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.+ அதனால், ‘இஸ்ரவேலர்கள் எப்படியும் நகரத்தைவிட்டு வெளியே வருவார்கள், அவர்களை உயிரோடு பிடித்துவிட்டு, நாம் நகரத்துக்குள் நுழைந்துவிடலாம்’ என்று சொல்லிக்கொண்டு, முகாமைவிட்டு வெளியே போய் ஒளிந்திருக்கிறார்கள்”+ என்று சொன்னார். 13  அப்போது அவருடைய ஊழியர்களில் ஒருவர், “என்ன நடந்தது என்று பார்த்துவிட்டு வருவதற்காகச் சில ஆட்களை அனுப்பித்தான் பார்க்கலாமே. இப்போது நம்மிடம் மீதியிருக்கிற குதிரைகளில் ஐந்து குதிரைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் போகட்டும். இங்கே பாருங்கள்! நகரத்துக்குள் இருந்தால் மட்டும் இவர்கள் என்ன சாகாமலா இருக்கப்போகிறார்கள்? இங்கே இருக்கிற இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும் என்ன கதியோ அதே கதிதான் இந்த ஆட்களுக்கும் வரப்போகிறது” என்று சொன்னார். 14  அதனால் ராஜா, “போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்று சொல்லி சீரியர்களின் முகாமுக்குச் சிலரை அனுப்பி வைத்தார். அவர்களும் இரண்டு ரதங்களில் குதிரைகளைப் பூட்டி கிளம்பிப் போனார்கள். 15  அவர்கள் யோர்தான் வரைக்கும் போய்ப் பார்த்தார்கள். சீரியர்கள் பீதியில் தலைதெறிக்க ஓடியபோது வீசியெறிந்த துணிகளும் சாமான்களும் வழியெங்கும் சிதறிக் கிடந்தன. ராஜா அனுப்பிய ஆட்கள் திரும்பி வந்து அவரிடம் விஷயத்தைச் சொன்னார்கள். 16  உடனே மக்கள் நகரத்திலிருந்து வெளியே போய், சீரியர்களின் முகாமுக்குள் புகுந்து கொள்ளையடித்தார்கள். அதனால், யெகோவா சொல்லியிருந்தபடியே ஒரு சியா அளவு நைசான மாவு ஒரு சேக்கலுக்கும் இரண்டு சியா அளவு பார்லி ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது.+ 17  ராஜா தன்னுடைய படை அதிகாரியை நகரவாசலுக்கு மேற்பார்வையாளராக நியமித்திருந்தார். ஆனால், அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவர் மிதிபட்டுச் செத்துப்போனார். உண்மைக் கடவுளின் ஊழியர் தன்னுடைய வீட்டுக்கு வந்திருந்த ராஜாவிடம் சொன்னபடியே நடந்தது. 18  “நாளைக்கு இந்நேரம் சமாரியாவின் நகரவாசலில் இரண்டு சியா அளவு பார்லி ஒரு சேக்கலுக்கும் ஒரு சியா அளவு நைசான மாவு ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும்” என்று உண்மைக் கடவுளின் ஊழியர் ராஜாவிடம் சொன்னது நிறைவேறியது.+ 19  ஆனால் ராஜாவின் படை அதிகாரி, “யெகோவா வானத்தின் கதவுகளைத் திறந்து கொட்டினால்கூட இப்படிப்பட்ட காரியம் நடக்காது” என்று உண்மைக் கடவுளின் ஊழியரிடம் சொல்லியிருந்தார். அதற்கு எலிசா, “அதை உன் கண்ணால் பார்ப்பாய், ஆனால் சாப்பிட மாட்டாய்” என்று சொல்லியிருந்தார். 20  அவர் சொன்னது அப்படியே நடந்தது; நகரவாசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது அந்தப் படை அதிகாரி மிதிபட்டுச் செத்துப்போனார்.

அடிக்குறிப்புகள்

வே.வா., “சந்தையில்.”
ஒரு சியா என்பது 7.33 லி. இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
ஒரு சேக்கல் என்பது 11.4 கிராம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.