கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
கடவுளுடைய வார்த்தையின்மேல் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்
நம் வாழ்க்கையையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது. (எபி 4:12) ஆனால், அதிலிருக்கும் வழிநடத்துதலும் ஆலோசனையும் நமக்குப் பிரயோஜனமாக இருக்க வேண்டுமென்றால், “அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்” என்பதை நாம் முழுமையாக நம்ப வேண்டும். (1தெ 2:13) பைபிள்மேல் உங்கள் விசுவாசத்தை எப்படிப் பலப்படுத்தலாம்?
தினமும் பைபிளில் ஒரு பகுதியைப் படியுங்கள். அப்படிப் படிக்கும்போது, அதை யெகோவாதான் கொடுத்திருக்கிறார் என்பதை என்னென்ன விஷயங்கள் காட்டுகின்றன என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, நீதிமொழிகள் புத்தகத்தில் இருக்கிற ஆலோசனைகளைப் படிக்கும்போது, அவை இன்றுவரை எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.—நீதி 13:20; 14:30.
ஆராய்ச்சி செய்து பாருங்கள். பைபிள் கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரங்களை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதற்கு, யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் பைபிள் > கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது என்ற தலைப்பில் பாருங்கள். அதோடு, பைபிளின் செய்தி மாறவில்லை என்பதில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள். அதற்கு, புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இணைப்பு A3-ஐப் பாருங்கள்.
நாம் ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் . . . கடவுளுடைய வார்த்தையில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
-
எகிப்தில் கார்நாக் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோயில் சுவர், பைபிள் சொல்வதெல்லாம் ரொம்ப உண்மை என்பதை எப்படி உறுதிப்படுத்துகிறது?
-
பைபிளில் இருக்கும் செய்தி மாறவில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?
-
பைபிள் எல்லா தாக்குதல்களையும் தாக்குப்பிடித்திருப்பது, அது கடவுளுடைய வார்த்தைதான் என்பதை எப்படிக் காட்டுகிறது?—ஏசாயா 40:8-ஐ வாசியுங்கள்