கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
முதலில் உங்கள் சகோதரனோடு சமாதானமாகுங்கள்—எப்படி?
இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: இயேசு வாழ்ந்த காலம். நீங்கள் கலிலேயாவில் குடியிருக்கிறீர்கள். கூடாரப் பண்டிகை கொண்டாடுவதற்காக இப்போது எருசலேமுக்கு வந்திருக்கிறீர்கள். அங்கே கூட்டம் அலைமோதுகிறது. யெகோவாவின் மக்கள் நாலாபக்கத்திலிருந்தும் வந்திருக்கிறார்கள். நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை தர விரும்புகிறீர்கள். அதனால், ஒரு ஆட்டைக் கயிற்றால் கட்டி இழுத்துக்கொண்டு, நகரத்தின் நெரிசலான சந்துபொந்துகள் வழியாக ஆலயத்துக்கு வந்து சேருகிறீர்கள். அங்கே ஏராளமானவர்கள் காணிக்கையோடு வந்திருக்கிறார்கள். கடைசியில், நீங்கள் அந்த ஆட்டைக் குருமார்களிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் வருகிறது. அப்போதுதான், உங்கள் சகோதரருக்கு உங்கள்மேல் மனஸ்தாபம் இருப்பது உங்களுக்கு ஞாபகம் வருகிறது. அவர் அந்தக் கூட்டத்திலும் இருக்கலாம், நகரத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை இயேசுவே சொல்கிறார். (மத்தேயு 5:24-ஐ வாசியுங்கள்.) அவர் சொல்கிறபடி, நீங்களும் மனம் புண்பட்ட அந்தச் சகோதரரும் எப்படி சமாதானமாகலாம்? கீழே இருக்கிற இரண்டு பட்டியல்களிலும், சரியான பதிலை டிக் செய்யுங்கள்.
நீங்கள் செய்ய வேண்டியது:
-
அவருடைய கோபத்துக்கு நியாயமான காரணம் இருப்பதாக நினைத்தால் மட்டும் அவரோடு பேச வேண்டும்
-
அவர் அளவுக்குமீறி உணர்ச்சிவசப்படுகிறார் என்றோ பிரச்சினைக்கு அவரும் காரணம் என்றோ நினைத்தால், அவருடைய எண்ணத்தைச் சரிசெய்ய வேண்டும்
-
அவர் பேசும்போது பொறுமையாகக் கேட்க வேண்டும்; உங்களுக்கு முழுமையாகப் புரியாவிட்டாலும் அவருடைய மனதைப் புண்படுத்தியதற்காகவும், தெரியாத்தனமாகப் பிரச்சினைகளை ஏற்படுத்தியதற்காகவும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்
உங்கள் சகோதரர் செய்ய வேண்டியது:
-
சபையிலுள்ள எல்லாருடைய ஆதரவையும் பெறுவதற்காக, நீங்கள் எப்படி அவருடைய மனதைப் புண்படுத்தினீர்கள் என்பதைப் பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டும்
-
உங்களிடம் கோபமாகப் பேசி, நீங்கள் செய்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் குத்திக் காட்டி, தப்பை ஒத்துக்கொள்ளச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்
-
நீங்கள் எவ்வளவு மனத்தாழ்மையோடும் தைரியத்தோடும் அவரிடம் வந்து பேசுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு உங்களை மனப்பூர்வமாக மன்னிக்க வேண்டும்
இன்று கடவுளை வணங்குவதற்கு நாம் மிருக பலிகளைச் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், நம் சகோதரரோடு சமாதானமாவதற்கும் கடவுள் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்வதற்கும் உள்ள சம்பந்தத்தைப் பற்றி இயேசு என்ன கற்றுக்கொடுத்தார்?