கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“இப்படிப் பேசலாம்” பகுதியைப் பயன்படுத்துவது எப்படி?
ஜனவரி 2018-லிருந்து, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் “இப்படிப் பேசலாம்” என்ற பகுதி வருகிறது. அதை எப்படிப் பயன்படுத்தலாம்?
மாணவருக்கான நியமிப்புகளில்... “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் கேள்வி, வசனம், மறுசந்திப்புக்கான கேள்வி ஆகியவற்றைத்தான் பயன்படுத்த வேண்டும். அதற்காக, அதன் வீடியோவில் வரும் அதே வார்த்தைகளைக் காப்பியடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு பதிலாக, வேறொரு ஊழிய முறையையோ அறிமுகத்தையோ பயன்படுத்தலாம். அல்லது வேறுவிதத்தில் விளக்கி புரியவைக்கலாம். அதுபோன்ற இன்னும் நிறைய விஷயங்களைச் செய்யலாம். “கற்பிப்பதற்கான கருவிகளில்” இருக்கும் ஒரு பிரசுரத்தைப் பயன்படுத்தச் சொல்லவில்லை என்றாலும் அதை நீங்கள் பயன்படுத்தலாம்.
ஊழியத்தில்... ஊழியத்தில் பேசுவதற்குத் தேவையான டிப்ஸ் “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கிறது. ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் நபர் ஆர்வம் காட்டி நிறைய தெரிந்துகொள்ள விரும்பினால், “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் மறுசந்திப்புக்கான தகவல்களை அப்போதே பயன்படுத்தி நீங்கள் பேசுவதைத் தொடரலாம். ஊழியத்தில் “இப்படிப் பேசலாம்” பகுதியிலிருக்கும் விஷயங்களை நீங்கள் கொஞ்சம் மாற்றியமைத்தோ அல்லது முழுவதுமாக வேறு தலைப்பிலோகூட பேசலாம். போன மாதத்தில் வந்த “இப்படிப் பேசலாம்” பகுதியில் இருக்கும் விஷயங்கள் அல்லது வேறு ஏதாவது வசனங்கள் உங்கள் ஊழியப் பகுதியில் இருப்பவர்களின் மனதைத் தொடுமா என்று யோசியுங்கள். அல்லது, தற்போதைய செய்தியை அல்லது சம்பவத்தைப் பற்றிப் பேசினால் அவர்கள் ஆர்வமாகக் கேட்பார்களா என்று யோசித்துப்பாருங்கள். இப்படி, வித்தியாசமான விதங்களில் “இப்படிப் பேசலாம்” பகுதியை நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால், “நல்ல செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக எல்லாவற்றையும் நல்ல செய்திக்காகவே” செய்வதுதான் உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.—1கொ 9:22, 23.