கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
இந்த உலகத்தின் முடிவிலிருந்து தப்பிப்போம் என்று நம்பிக்கையாக இருங்கள்
இந்த உலகத்தின்மீது யெகோவா காட்டிவரும் பொறுமைக்குச் சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது. பொய் மதங்கள் அழிக்கப்படும்; தேசங்களின் கூட்டணி யெகோவாவின் மக்களைத் தாக்கும்; பிறகு, கெட்டவர்களை அர்மகெதோனில் யெகோவா அழிப்பார். இந்த முக்கியமான சம்பவங்களுக்காகக் கிறிஸ்தவர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
மிகுந்த உபத்திரவத்தைப் பற்றிய எல்லா விவரங்களும் நமக்குத் தெரியாது என்பது உண்மைதான். உதாரணத்துக்கு, அது எப்போது ஆரம்பமாகும், என்ன காரணத்தைச் சொல்லி அரசியல் அமைப்புகள் மதங்களைத் தாக்கும், கடவுளுடைய மக்கள் எவ்வளவு காலத்துக்குத் தாக்கப்படுவார்கள், எப்படியெல்லாம் தாக்கப்படுவார்கள் என்றெல்லாம் நமக்குத் தெரியாது. அதோடு, கெட்டவர்களை அழிக்க அர்மகெதோன் போரில் யெகோவா எதைப் பயன்படுத்துவார் என்பதும் நமக்குத் தெரியாது.
ஆனால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் நம்பிக்கையோடும் தைரியத்தோடும் இருக்க நமக்குத் தேவையான எல்லா தகவல்களும் பைபிளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்று நமக்குத் தெரியும். (2தீ 3:1) உண்மை மதம் அழிந்துவிடாமல் இருப்பதற்காக, பொய் மதத்தின் மீதான தாக்குதல் “குறைக்கப்படும்” என்று நமக்குத் தெரியும். (மத் 24:22) யெகோவா தன் மக்களைக் காப்பாற்றுவார் என்று நமக்குத் தெரியும். (2பே 2:9) அர்மகெதோனில் கெட்டவர்களை அழித்துவிட்டு, திரள் கூட்டத்தைக் காப்பாற்ற யெகோவா தேர்ந்தெடுத்திருக்கும் நபர் நீதியானவர் என்றும் வல்லமையுள்ளவர் என்றும் நமக்குத் தெரியும்.—வெளி 19:11, 15, 16.
எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களைப் பார்க்கும்போது “பயத்தில் மக்களுக்குத் தலைசுற்றும்.” ஆனால் நாம், கடந்தகாலங்களில் யெகோவா தன் மக்களை எப்படிக் காப்பாற்றியிருக்கிறார்... எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார்... என்பதையெல்லாம் படித்து ஆழமாக யோசித்தோம் என்றால், ‘நேராக நிமிர்ந்து நின்று, தலைகளை உயர்த்தி’ விடுதலை நெருங்கிவிட்டது என்று சொல்வோம்.—லூ 21:26, 28.