Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கி.பி. 33-ல் பஸ்கா பண்டிகைக்காக பேதுருவும் யோவானும் மாடி அறையைத் தயார்படுத்துகிறார்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?

நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?

இயேசு கொண்டாடிய கடைசி பஸ்கா ரொம்ப விசேஷமானது. அவருடைய மரணம் நெருங்கிக்கொண்டிருந்ததால், தன்னுடைய அப்போஸ்தலர்களோடு சேர்ந்து பஸ்கா உணவைச் சாப்பிட அவர் திட்டம் போட்டிருந்தார், அதோடு, வருஷாவருஷம் அனுசரிக்க வேண்டிய ஒரு புதிய நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கவும் திட்டம் போட்டிருந்தார். அதுதான், எஜமானுடைய இரவு விருந்து. ஒரு அறையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக பேதுருவையும் யோவானையும் அவர் அனுப்பினார். (லூ 22:7-13; அட்டைப் படம்.) இது, மார்ச் 27-ல் நடக்கப்போகும் நினைவு நாள் நிகழ்ச்சிக்குத் தயாராவதன் அவசியத்தை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. பேச்சாளரைத் தேர்ந்தெடுப்பது, நினைவு நாளுக்கான சின்னங்களைத் தயார்படுத்துவது போன்ற ஏற்பாடுகளை சபை மூப்பர்கள் ஏற்கெனவே செய்திருப்பார்கள். ஆனாலும், நினைவு நாளுக்குத் தயாராவதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம்?

மனதைத் தயார்படுத்துங்கள். நினைவு நாள் வாரத்தில் படிக்க வேண்டிய வசனங்களை வாசித்து, ஆழமாக யோசித்துப்பாருங்கள். இதற்கான அட்டவணையை சிந்திக்க தினம் ஒரு வசனம் என்ற சிறு புத்தகத்தில் பார்க்கலாம். புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இணைப்பு B12-ல் கூடுதல் விவரங்கள் அடங்கிய அட்டவணை இருக்கும். (வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கான பயிற்சிப் புத்தகம், ஏப்ரல் 2020-யும் பாருங்கள்.) மீட்புவிலையின் முக்கியத்துவத்தைக் குடும்ப வழிபாட்டில் கலந்துபேசுவதற்குத் தேவையான குறிப்புகளை உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் பார்க்கலாம்.

மற்றவர்களை அழையுங்கள். மற்றவர்களை அழைப்பதற்கான விசேஷ ஊழியத்தில் முழுமையாகக் கலந்துகொள்ளுங்கள். மறுசந்திப்புகள், விட்டுப்போன பைபிள் படிப்புகள், பழக்கமானவர்கள், சொந்தக்காரர்கள் என யாரையெல்லாம் அழைக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள். செயலற்ற பிரஸ்தாபிகளை மூப்பர்கள் கண்டிப்பாக அழைக்க வேண்டும். நீங்கள் அழைக்கும் நபரின் வீடு உங்கள் பகுதியில் இல்லையென்றால் என்ன செய்யலாம்? அவர் வாழும் பகுதியில் நினைவு நாள் நிகழ்ச்சி எந்த நேரத்தில், எந்த இடத்தில் நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள jw.org-ன் முதல் பக்கத்துக்குப் போங்கள். பிறகு, எங்களைப் பற்றி என்ற பகுதிக்குப் போய் “இயேசுவின் மரண நினைவு நாள் நிகழ்ச்சி” என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்.

நினைவு நாள் நிகழ்ச்சிக்குத் தயாராவதற்கு வேறு என்னவெல்லாம் செய்யலாம்?